சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமண விவகாரத்தில் கடந்த வாரம் திருமணம் செய்ததாக புகைப்படங்கள் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கோயிலில் கனகசபை மீது ஏறி 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்யக்கூடாது என தீட்சிதர்கள் பதாகை அமைத்ததால் பரபரப்பு உண்டானது.
இதனை அடுத்து அந்த பதாகையை அதிகாரிகள் அகற்ற முயன்றபோது, தீட்சிதர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
அதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், சிதம்பரம் நடராஜர் கோயிலை தங்கள் சொந்த நிறுவனம் போல தீட்சிதர்கள் நினைக்கிறார்கள். ஒட்டுமொத்த பக்தர்களும் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நடத்த வேண்டும் என நினைக்கிறார்கள். ஆவணங்களை திரட்டி அதற்கான பணிகள் படிப்படியாக நடைபெறும். சிதம்பரம் கோயிலில் அதிகார மையமாக தீட்சிதர்கள் செயல்படுகின்றனர்’ என இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு கூறினார்.