“வேணு…… திருகாணியை திருடறது தப்பு… திருப்பிக் கொடுத்துடு கண்ணு… வந்திருக்கிறவங்க நம்மள தப்பா நெனப்பாங்க…”
ஒருமாதிரி இழுவையான குரலில் ஜனகராஜ் வசனம் பேச, அதையே பிரதிபலிக்கும் இன்னொரு வகையான மாடுலேஷனில் “நைனா…” என்று ஆரம்பித்து பாண்டியராஜன் பேசும் ஸ்டைலை தமிழ் சினிமா ரசிகர்களால் அத்தனை எளிதில் மறந்திருக்க முடியாது. தந்தை – மகனாக இவர்கள் நடித்த காம்போ பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. ‘ஆண் பாவம்’ அளவிற்குக் கவனிக்கப்படாமல் போனாலும் பாண்டியராஜனின் பிரத்யேக முத்திரைகள் அழுத்தமாகப் பதிந்த படம் ‘நெத்தியடி’. அவருடைய இயக்கத்தில் உருவான நான்காவது திரைப்படம் இது. 1989-ல் வெளிவந்தது.
இந்தப் படத்திற்கு ஒரு தனித்த சிறப்புண்டு. இந்தப் படத்தில் பாண்டியராஜன் இசையமைப்பாளர் பணியையும் மேற்கொண்டார். தன் குருநாதர் பாக்யராஜின் பாணியில் பாண்டியராஜனும் ஹார்மோனியத்தில் கை வைக்கத் துணிந்துவிட்டார். சந்திரபோஸ் + டி.ஆர் பாணியின் கலவைப் போல பாடல்கள் அனைத்தும் ஒரு மாதிரி சுமாரான இனிமையுடன் இருந்தன. ஆனால் தமிழ் ரசிகர்களை அதிகம் சோதிக்க வேண்டாம் என்றோ, என்னமோ ஒரு படத்தோடு இசையமைப்பதை நிறுத்திக் கொண்டது பாண்யராஜனின் புத்திசாலித்தனம்.

முதுகைப் பார்த்து மலரும் ஹீரோவின் காதல்
கிராமத்தில் பொறுப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் இளைஞன் வேணு. இவனது தந்தை ‘மைசூர்’ மாணிக்கம், திருமண விழாக்களுக்கு உணவு தயாரிக்கும் சமையல் மாஸ்டர். உறவுக்காரப் பாட்டி இறந்து விடுவதால் வேணுவின் வீட்டிற்கு சுற்றத்தார் வருகிறார்கள். வேணுவின் முறைப் பெண்ணான பானுவும் வருகிறாள். பானுவின் முகத்தைப் பார்த்ததும், மன்னிக்கவும்… முதுகைப் பார்த்ததும் வேணுவிற்குள் காதல் வந்து விடுகிறது. ஆனால் கோணங்கித்தனமான வேணுவின் செயல்களைக் கண்டு உள்ளூற பானு சிரிக்கிறாளே தவிர காதல் கொள்வதில்லை. எனவே வேணு விஷம் குடித்து பானுவின் மீது தனக்குள்ள தீவிரமான காதலை வெளிப்படுத்துகிறான். உடனே பானுவிற்கும் காதல் வந்து விடுகிறது. (?!) “வீட்டிற்கு வந்து பெண் கேள்” என்று திருமணத்திற்கு சம்மதிக்கிறாள்.
“காசு, பணம் இருக்கறவனுக்குத்தான் என் பொண்ணை கட்டிக் கொடுப்பேன்” என்று பானுவின் தந்தை கறாராக இருப்பதால், கடன் வாங்கி ஒரு டுபாக்கூர் அரசியல்வாதியின் மூலம் இடம் வாங்கி ஒரு சிறிய ஹோட்டலைக் கட்டுகிறான் வேணு. திறப்பு விழா கனஜோராக நடப்பதால் பெண்ணின் தந்தை திருமணத்திற்கு சம்மதிக்கிறார். திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது வேணுவின் தலையில் இடி விழுகிறது. அனுமதியில்லாத இடத்தில் ஹோட்டல் கட்டியிருப்பதாகச் சொல்லி காவல்துறை இடித்துத் தள்ளுகிறது. இதனால் திருமணம் நின்று போகிறது. வேணு எத்தனையோ கெஞ்சியும் பெண்ணின் தந்தை சம்மதிப்பதில்லை.

பானுவை இழுத்துக் கொண்டு வேணு வேகமாக ஊரை விட்டு ஓட முயல்கிறான். பெண்ணுடைய தந்தையின் ஆட்கள் வேணுவை கொலைவெறியோடு துரத்துகிறார்கள். தப்பிக்கும் நோக்கத்தோடு ஓடும் வேணுவின் மீது ஒரு கார் வந்து மோதுகிறது. அந்த விபத்துதான் வேணுவின் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றுகிறது.
பிறகு என்னவானது? வேணுவின் காதல் திருமணத்தில் முடிந்ததா? வேணு மற்றும் அவனது குடும்பம் செய்யும் அலப்பறையை நீங்கள் படம் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.
பாண்டியராஜனின் ரகளையான அலப்பறைகள்
வேணுவாக பாண்டியராஜன். வெள்ளந்தியான கிராமத்து இளைஞனாக, தலைமுடியை ஒட்ட வெட்டிய தோரணையிலும் இடைவேளைக்குப் பிறகு பணக்கார கெட்டப்பிலும் வருகிறார். கிராமத்து இளைஞர்கள் எதற்கோ ஆவேசமாகத் தலைதெறித்து ஓடும் ஆரம்பக் காட்சியிலேயே கலகலப்பும் ஆரம்பித்து விடுகிறது. அந்தக் கிராமத்து தெருக்களிலுள்ள பல பொருள்களை உடைத்துக் கொண்டு, ஆட்களைத் தள்ளி விட்டு அவர்கள் ஓடுவதைப் பார்த்தால் ஏதோ கலவரம் என்றுதான் முதலில் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் காற்றாடியைப் பிடிப்பதற்காகத்தான் இத்தனை களேபரமும். இதிலேயே வேணுவின் பொறுப்பின்மையைப் பற்றி நமக்குத் தெரிந்து விடுகிறது.

அடுத்ததாக இன்னொரு சிறப்பான சம்பவத்தைச் செய்வார் பாண்டியராஜன். ‘பாட்டி இறந்த தகவலை உறவினர்களுக்குச் சொல்லி விட்டு வா’ என்று பணம் கொடுத்து அனுப்புவார்கள். அவர் பாட்டுக்கு ஜாலியாக எம்.ஜி.ஆர், சிவாஜி நடித்த படங்களை தியேட்டரில் ஜாலியாகப் பார்த்து விட்டு, அப்பாவியான முகத்தை மாட்டிக் கொண்டு திரும்பி வருவார். தந்தையான ஜனகராஜ் விசாரிக்கும் போது, தனது டிரேட் மார்க் முழியுடன் ‘நான் வர்றதுக்குள்ள பாடிய எடுத்துட்டீங்களே. பாட்டியைக் கடைசியா பார்க்க முடியாம போச்சே’ என்று அழுது அலப்பறை செய்வது ரசிக்கத்தக்க நகைச்சுவை. அந்தக் காலகட்டத்தில் பதின்ம வயது இளைஞர்கள் வீட்டிலிருந்து சில்லறையைத் தேற்றுவதற்காகச் செய்யும் குறும்புத்தனங்கள், இந்தக் காட்சியின் மூலம் ஒவ்வொருவருக்கும் நினைவில் வந்திருக்கும்.
பாண்டியராஜனைப் போலவே ஜனகராஜிற்கும் ஒரு நகைச்சுவையான அறிமுகக்காட்சி உண்டு. மாலை ஆறு மணியாகி விட்டால் ஜனகராஜிற்கு கைகள் நடுங்கத் தொடங்கி விடும். நேராகச் சாராயக்கடைக்குச் சென்று விடுவார். கிளாஸை எடுத்து வாயில் வைப்பதற்குள் கை நடுங்கி அனைத்தும் சிந்தி விடும். அது சிந்தாமல் சிதறாமல் உள்ளே செல்வதற்கு ஜனகராஜ் பின்பற்றும் டெக்னிக்கை எதிர் பெஞ்ச்சில் இருக்கும் முதியவர்களும் பின்பற்றுவது கலகலப்பான காட்சி.
‘காலை சாப்பாட்டுல பூனைன்னா மதியம் என்னவா இருக்கும்?’
‘தொழில்ன்னு வந்துட்டா அப்பா – புள்ளைன்னுல்லாம் பார்க்க மாட்டேன்’ என்று சமையல் மாஸ்டரான ஜனகராஜ் கெத்து காட்டுவதும், பானுவை நினைத்துக் கொண்டே திருமண வீட்டுச் சமையலில், முந்திரிப்பருப்பை தீய வைத்து பாண்டியராஜன் முதுகில் அடிவாங்குவதும் நடைமுறை நகைச்சுவை. சாம்பாரில் அனைவரும் தவறுதலாக உப்பு போட்டு விட, ‘சுடுதண்ணிய எடுத்து ஊத்து… மேலே இருந்து எடுத்தா ரசம், நடுவுல எடுத்தா சாம்பார், கடைசில எடுத்தா கூட்டு’ என்று ஜனகராஜ் தன் அனுபவத் திறமையை வைத்து சமாளிக்கும் காட்சி ரசனையானது.

மைசூர்பாக் சாப்பிட ஆசைப்படும் தன் மகனை, ஓர் அண்டாவில் போட்டு மறைத்து விடுவார் ஸ்வீட் மாஸ்டர். சாம்பாரில் விழுந்த பூனையின் தலை, திருமணப் பந்தியில் ஒருவருக்கு வருவதும் (மைக்கேல் மதன காமராஜனுக்கு முன்னோடி இந்தக் காட்சிதான் போல), ‘மாப்பிள்ளை வீட்டுக்காரன் நானு… எனக்கு ஒண்ணுமே வரலை’ என்று இன்னொருவர் புலம்புவதும், ‘காலைல சாப்பாட்டுக்கு பூனை போட்டிருக்காங்கன்னா”.. மதியம் சாப்பாட்டுக்கு என்னவா இருக்கும்?” என்று திருமண வீட்டார் ஆத்திரத்துடன் சமையல்கட்டில் வந்து பார்க்க, மைசூர்பாகை சுவைத்துக் கொண்டே அண்டாவிற்குள் இருந்து புகையுடன் கிங்காங் எழுவதும்… கலாட்டாவான காட்சிகள்.
இந்தப் படத்தின் ஹீரோயின் வைஷ்ணவி. சௌகார் ஜானகியின் பேத்தி என்பது பலருக்கும் தெரியும். இதற்கு முன் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் கதாநாயகியாக பரவலாகத் தெரிந்த படம் ‘நெத்தியடி’தான். சிலருடைய முகங்களில் ஒரு நிரந்தரமான சோகச் சாயல் தெரியும். எனவே அவர்களை ‘அழுகாச்சி’ பாத்திரங்களிலேயே நடிக்க வைப்பார்கள். சௌகார் ஜானகி கூட அப்படித்தான். இந்த வரிசையில் வைஷ்ணவியும் பிறகு இணைந்தார். இந்தப் படத்தில் ஒரே மாதிரியான முகபாவத்துடன் நடித்துச் சென்றார்.
அமலாவின் அட்டகாசமான எண்ட்ரி
வைஷ்ணவி மீது பாண்டியராஜனுக்கு ரொமான்ஸ் ஆரம்பிப்பதே ஒரு ரகளையான குறும்புதான். குளியல் அறையில் நாயகியின் முதுகைப் பார்த்து திகைத்து குளிர்சுரம் வந்தது போல் நின்று விடுவார் பாண்டியராஜன். அடுத்த சீனில் அவருக்கு பூசாரியிடம் மந்திரிப்பது போல் காட்சி இருக்கும். பிறகு இன்னொரு குளியல் காட்சியில், தன்னுடைய முதுகைக் காட்டும் பாண்டியராஜன் ‘அதுக்கும் இதுக்கும் சரியாப் போச்சு’ என்பது அக்மார்க் பாக்யராஜ் காமெடி.
‘கௌரவ நடிகர்’ என்றாலும் கணிசமான காட்சிகளில் வந்து போனார் அமலா. எப்போதும் சோக ரியாக்ஷன் காட்டிய வைஷ்ணவியைப் பார்த்து சோர்வடைந்திருந்த கண்களுக்கு ஆறுதலாக அமைந்தது, அமலாவின் எண்ட்ரிதான். பாண்டியராஜனின் காதல் நிறைவேறுவதற்கு இவர் உதவுவது சுவாரஸ்யமான காட்சிகளாக இருந்தன. பணக்காரர்கள் கெட்டப்பில் பாண்டியராஜனின் குடும்பம் செய்யும் லூட்டிகள் அனைத்தும் நகைச்சுவையாக இருந்தன.

கோனக்கால் சித்தப்பாவாக திடீர் கன்னைய்யா நடித்திருந்தார். இலங்கையைத் தாண்டுவது போல் இவர் காலைத் தூக்கி தூக்கி நடந்து வருவது அந்தக் காலத்தில் கவனத்திற்குரிய காமெடியாக மாறியது. இந்தக் காலத்தில் அது கொஞ்சம் நெருடலாகத் தோன்றலாம். இழவு வீட்டிற்குப் புறப்படுவதற்கு முன் வீட்டிலிருந்தே ஒப்பாரியை ஆரம்பித்து விடும் சுவாரஸ்யமான கேரக்ட்டரில் சண்முகசுந்தரி இயல்பாக நடித்திருந்தார். ‘பலகட்சி பச்சையப்பனாக’ சில காட்சிகளில் செந்தில் நடித்திருந்தாலும் அத்தனை கவனத்தைக் கவரவில்லை. (கவுண்டமணியுடன் கூட்டணி அமைக்காவிட்டால் செந்திலின் பலம் கணிசமாகக் குறைந்து விடுகிறது.) பாண்டியராஜனின் மாமனாராக நடித்திருந்தவர், தெலுங்கு வில்லன் போல இருந்தாலும் ‘காசுதான்டா முக்கியம்’ என்று நன்றாக மிரட்டலாக நடித்திருந்தார்.
பாண்டியராஜன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்த ஒரே திரைப்படம்
பாண்டியராஜன் இசையமைப்பாளராக அறிமுகமான இந்தப் படத்தில் டைட்டில் பாடலை அவரே பாடியிருந்தார். இதர பாடல்கள் சுமார் என்றாலும் எஸ்.பி.பி மற்றும் சித்ரா பாடிய ‘குக்கூவென கூவும்’ என்கிற பாடல் நன்றாக இருந்தது.

இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் அசோக்குமார். மகேந்திரனின் படங்களில் வேறு மாதிரியாக பிரகாசிக்கும் இவர், வெகுசனப் படங்களில் அதற்குரிய ஒளிப்பதிவை கச்சிதமாகத் தந்திருந்தார்.
பாண்டியராஜனின் பெரிய வெற்றிப் படங்களில் `நெத்தியடி’யை இணைக்க முடியாவிட்டாலும், அவருடைய பிரத்யேக பிராண்ட் நகைச்சுவைக்காகவும், ஜனகராஜ் உடன் இணைந்து அடிக்கும் லூட்டிக்காகவும் இன்று கூட பார்த்து ரசிக்கும் அளவில் இருக்கிறது படம்.