கேம் சேஞ்சர் அஜித் பவார்… உடைந்த என்.சி.பி, கைக்கு வந்த ஜாக்பாட்… மகாராஷ்டிரா அரசியலில் ட்விஸ்ட்!

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இப்படி நடக்கும் என்றும் அதன் தலைவர் சரத் பவார் சிறிதும் எதிர்பார்த்திருக்க மாட்டார். சமீபத்தில் தான் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து பரபரப்பை உண்டாக்கினார். அதன்பிறகு கட்சி நிர்வாகிகள், தொண்டர்களால் சமாதானம் செய்யப்பட்டு அமைதி நிலைக்கு திரும்பினார்.

தேசியவாத காங்கிரஸில் பிளவு

உடனே கட்சியின் செயல் தலைவராக மகள் சுப்ரியா சுலேவை நியமித்தார். இந்த நடவடிக்கையால் சரத் பவார் அண்ணன் மகன் அஜித் பவார் தரப்பு கடும் அதிருப்தி அடைந்ததாக சொல்லப்பட்டது. ஆனாலும் சுப்ரியா சுலேவிற்கு வாழ்த்து தெரிவித்து அஜித் பவார் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தான் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அஜித் பவார் கொடுத்த ஷாக்

அதாவது, அஜித் பவார் தன்னுடைய தேசியவாத காங்கிரஸ் கட்சியில் உள்ள 9 ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சென்று ஆளும் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) – தேவேந்திர பட்னாவிஸ் (பாஜக) கூட்டணியில் இணைந்துள்ளார். அதுமட்டுமின்றி ஆளும் கூட்டணி அரசில் அஜித் பவாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

எம்.எல்.ஏக்கள் ஆதரவு

இந்த பதவியை தேவேந்திர பட்னாவிஸ் உடன் அஜித் பவார் பகிர்ந்து கொள்வார் என்கின்றனர். இதுதவிர தன்னுடன் வந்த எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவிகளை வாங்கி கொடுத்துள்ளார். தற்போதைய சூழலில் அஜித் பவாருக்கு 29 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கியிருப்பதாக தெரிகிறது.

ராஜ்பவனில் பதவியேற்பு விழா

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 54 எம்.எல்.ஏக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநில ராஜ் பவனில் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. இதில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார், சகான் பூஜ்பால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சரத் பவார் மீது அதிருப்தி

பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் சரத் பவார் தன்னிச்சையாக முடிவெடுத்து கலந்து கொண்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இவர்கள் தான் தற்போது அஜித் பவார் உடன் சேர்ந்து கொண்டு அணி மாற தயாராகினர். சற்று முன்பு ராஜ்பவனில் பதவியேற்பு விழா நடந்து முடிந்துள்ளது.

அமைச்சர்களாக பதவியேற்பு

இதில் ஷிண்டே சிவசேனாவை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சிலரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த சம்பவத்தால் சரத் பவார் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. எனவே நாங்கள் மீண்டும் வலுப்பெற்று வருவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.