புனே: மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பலரும் ஆளும் சிவசேனா (ஷிண்டே பிரிவு) – பாஜக கூட்டணியில் இணைந்தனர். இந்நிலையில், தங்கள் கட்சியில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தனது இல்லத்தில் ஞாயிறு அன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அதன்போது அவர் தெரிவித்தது.
“எனக்கு மகாராஷ்டிரா மாநில மக்கள் மீது நம்பிக்கை உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். சட்டப் போராட்டம் மேற்கொண்டு நேரத்தை வீணடிப்பதை காட்டிலும் மக்களை நாங்கள் அணுக உள்ளோம்.
எங்கள் கட்சியின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எங்களுடன் தற்போது எத்தனை பேர் உள்ளனர் என்ற விவரத்தை அறிய சிறிது நேரம் எடுக்கும். ஆனால், கட்சியின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வரும் தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜிதேந்திர அவாத், மாநில எதிர்க்கட்சித் தலைவராக இயங்குவார்.
இது எனக்கு புதிதல்ல. 1980 முதலே இது மாதிரியான சூழலை நான் எதிர்கொண்டுள்ளேன். அப்போது 58 எம்.எல்.ஏக்களுடன் எதிர்க்கட்சித் தலைவராக இயங்கினேன். ஒரே மாத காலத்தில் என்னுடன் சேர்த்து 6 பேர் மட்டுமே இருந்தோம். அந்த சூழலிலும் கட்சியை மீண்டும் கட்டமைத்தோம். அடுத்த 5 ஆண்டுகளில் 69 எம்.எல்.ஏக்கள் எங்கள் கட்சியில் இருந்தனர். எங்கள் கட்சியில் இருந்து விலகியவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தோல்வியை தழுவினர். அதனால் இப்போது நடந்துள்ளதில் எனக்கு கவலை இல்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஊழல் கட்சி என்றார் பிரதமர் மோடி. அது சார்ந்து சில ஊழல் குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். ஆனால், தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தான் இப்போது அவர்கள் கட்சியின் கூட்டணியில் இணைந்துள்ளனர். இதன் மூலம் அவர் வைத்து குற்றச்சாட்டுகள் நீங்கிவிட்டன. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்சியின் அமைப்பு சார்ந்து சில மாற்றங்களை மேற்கொள்ள விரும்பினேன். வரும் 6-ம் தேதி அதற்கான கூட்டம் நடத்த இருந்தோம். ஆனால், இப்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு அடுத்த இரண்டு நாட்களில் அதுகுறித்த முடிவு எடுக்கப்படும். அஜித் பவாரின் முடிவு அவரது தனிப்பட்ட முடிவாகும். அது தேசியவாத காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவு அல்ல என்பதை நான் தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்” என சரத் பவார் தெரிவித்துள்ளார்.