சென்னை:
‘மாமன்னன்’ திரைப்படம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுள்ள கேள்விதான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மாமன்னன் திரைப்படத்தை கொண்டாடிய ரசிகர்கள்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’ . ஆரம்பத்திலேயே “தேவர் மகன் பார்ட் 2 ” என்று கூறி ஹைப்பை ஏற்றிவிட்டதால் இத்திரைப்படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில், கடந்த வாரம் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் வசூலை வாரி குவித்து வருகிறது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சட்டமன்ற உறுப்பினரான பிறகும் அவரை ஜாதி இழிவு எவ்வாறு துரத்துகிறது? அதனை உடைத்து வெளியே வர அவரும், அவரது குடும்பத்தினரும் எத்தனை பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது? என்பதுதான் படத்தின் சாராம்சமாக இருக்கிறது. இதில் எம்எல்ஏ கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலுவும், அவரது மகனாக உதயநிதி ஸ்டாலினும் நடித்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, இந்த திரைப்படம் முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பலரும் கூறி வருகின்றனர். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த தனபால், பல்வேறு சாதியக் கொடுமைகளை எதிர்கொண்டு வந்ததை அறிந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அவரை சபாநாயகராக ஆக்கியதாகவும் அதிமுகவினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் நிருபர் ஒருவர், “மாமன்னன் திரைப்படம் முன்னாள் சபாநாயகர் தனபால் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறதே.. அப்படி என்றால் இந்த திரைப்படம் அதிமுகவின் வெற்றியா?” என்று கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மா. சுப்பிரமணியன், “இந்த திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ், தனது தந்தையை மையமாக வைத்தே திரைக்கதை எழுதியதாக கூறியிருக்கிறார். சரி, அப்படியே இந்த திரைப்படம் தனபாலின் கதை என்றே வைத்துக் கொள்வோம். அப்படியென்றால், அவரை கொடுமைப்படுத்தும் வில்லனாக வரும் ஃபகத் பாசில் யார்? தனபால் எம்எல்ஏவாக இருந்த போது சேலத்தில் மாவட்டச் செயலாளராக இருந்தது யார்? சர்ச்சைக்குள் நான் செல்ல விரும்பவில்லை” எனக் கூறினார்.
தனபால் எம்எல்ஏவாக இருந்த போது சேலத்தில் மாவட்டச் செயலாளராக இருந்தவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பது நினைவுக்கூரத்தக்கது.