வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : டில்லியில் நீட் தேர்வில் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பல், ரூ.7 லட்சம் பெற்றுக்கொண்டு ஆள்மாறாட்டம் மற்றவர்களுக்காக தேர்வு எழுதியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக டில்லி போலீசார் கூறுகையில், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இரண்டாவது ஆண்டு படிக்கும் நரேஷ் பிஷ்ரோய் என்பவர் இந்த கும்பலின் தலைவராக செயல்பட்டு உள்ளார். நீட் தேர்வில் மோசடி செய்ய, இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் பணம் தருவதாக கூறி ஆட்களை சேர்த்து உள்ளார். பிறகு, பல்வேறு இடங்களில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக நடந்த தேர்வுகளில் மற்றவர்களிடம் தலா ரூ.7 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு, தனது கும்பலை சேர்ந்த மாணவர்கள் மூலம் தேர்வு எழுத வைத்துள்ளார்.

இது தொடர்பாக நரேஷ் பிஷ்ரோய், சஞ்சு யாதவ், மஹாவீர் மற்றும் ஜிதேந்திரா என்ற மாணவர்களை டில்லி போலீசார் கைது செய்தனர். இதில் நரேஷ் பிஷ்ரோய், இரண்டாவது முறையாக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட போது போலீசாரிடம் சிக்கி உள்ளார். சஞ்சு, முதல்முறையாக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட போது சிக்கினார். மற்ற இரண்டு மாணவர்களும் நாக்பூரில் கைதானார்கள். இவர்களிடம் இருந்து மடிக்கணினி மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். இந்த மோசடியில் வேறு எந்த மாணவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement