மும்பை: மும்பை பாந்த்ராவில் உள்ள ஒய்.பி.சவாண் மையத்தில் நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு நடைபெற்ற கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 14 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
அவர்கள் மத்தியில் கட்சித் தலைவர் சரத் பவார் பேசியதாவது: நாம் அதிகாரத்துக்கு ஆசைப் படவில்லை. ஒட்டு மொத்த நாடும் நம்மை கவனித்துக் கொண்டு இருக்கிறது. இந்தக் கூட்டம் தேசிய வாத காங்கிரஸ் கட்சிக்கு வரலாற்று சிறப்புமிக்கது. தடைகளை தாண்டி நமது வழியில் நாம் முன்னேறி செல்ல வேண்டும். தனக்கு எதேனும் பிரச்சனை இருப்பதாக அஜித் பவார் கருதி இருந்தால் அவர் என்னிடம் பேசியிருக்க வேண்டும்.
மனதில் ஏதாவது இருந்தாலும் என்னை தொடர்பு கொண்டு இருக்கலாம். கட்சியின் சின்னம் நம்மிடம் தான் இருக்கிறது. நமக்கு அதிகாரத்தை கொடுத்த மக்களும் கட்சி தொண்டர்களும் நமக்கு ஆதரவாகவே உள்ளனர். தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர். நம்முடைய கட்சியை, ஊழல் கட்சி என்று பாஜக தலைவர்கள் கூறி வந்தனர். இப்போது ஊழல் கட்சியின் ஆதரவு, பாஜகவுக்கு எதற்கு என்று நான் கேள்வி கேட்கிறேன். இந்த யுத்தத்தில் நாம் வெல்வோம். 83 ஆண்டு அனு பவத்தில் நான் பேசுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.