சென்னை: கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் லியோ.
இத்திரைப்படத்தில் விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய லியோ ஷூட்டிங், காஷ்மீர், சென்னை, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.
இந்நிலையில், லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லியோ ஷூட்டிங் நிறைவு
விஜய்யின் 67வது படமாக உருவாகி வரும் லியோ, அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் – லோகேஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், லியோ மீதான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
மல்டி ஸ்டார்ஸ் படமாகவும் பிரம்மாண்டமாகவும் உருவாகும் லியோ, இந்தாண்டின் மெகா பிளாக் பஸ்டர் ஹிட் லிஸ்ட்டில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக விஜய்யின் கேரியரில் இது தரமான சம்பவம் செய்யும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், கடந்த ஜனவரியில் தொடங்கிய லியோ ஷூட்டிங், தொடர்ந்து சென்னை, ஆந்திராவின் தலக்கோனா ஆகிய பகுதிகளிலும் நடைபெற்றது.
மூன்று ஷெட்யூலாக நடைபெற்று வந்த லியோ ஷூட்டிங், தற்போது முடிவுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் ஆகியோரது காட்சிகள் கடைசியாக தலக்கோனா பகுதிகளில் எடுக்கப்பட்டு வந்ததாம். கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு, நேற்றோடு முடிவுக்கு வந்துள்ளது. இனிமேல் சில பேட்ஜ் ஒர்க் வேலைகள் மட்டுமே இருப்பதாகவும், விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை லோகேஷ் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அக்டோபர் 19ம் தேதி லியோ வெளியாகவுள்ளதால், எடிட்டிங், பின்னணி இசை என அடுத்தடுத்து பிரேக் இல்லாமல் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெறுகிறதாம். அதேநேரம் ரசிகர்களுக்காக அவ்வப்போது லியோ அப்டேட்டை வெளியிட லோகேஷ் முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே விஜய் பிறந்தநாளில் லியோ ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட்டு அதிரி புதிரி சம்பவம் செய்தார் லோகேஷ். அதன் தொடர்ச்சியாக மேலும் பல அப்டேட்ஸ் விரைவில் வெளியாகவுள்ளதாம்.
முக்கியமாக லியோ ட்ரெய்லர் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதற்கும் முன்னதாக லியோ கிளிம்பிஸ், செகண்ட் சிங்கிள், விஜய் தீம் மியூசிக் ஆகியவையும் வெளியாகவுள்ளதாம். லியோ படத்தை 7 ஸ்க்ரீன்ஸ் பேனரில் லலித் குமார் தயாரிக்கிறார். மாஸ்டர் படத்திற்குப் பின்னர் இரண்டாவது முறையாக இணைந்துள்ள விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத், லலித் குமார் கூட்டணி, இந்த முறையும் சம்பவம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.