ரோகித் சர்மா தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி அந்நாட்டு அணிக்கு எதிராக முதலில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர். இதன் பின்னர் இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் ஓப்பனிங் இறங்கினர்.
சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா 103 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க மறு முனையில் நங்கூரம்போல் நிலைத்து நின்ற இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் சதத்தை நிறைவு செய்தார். 200 ரன்கள் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 173 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அறிமுக டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஷிகர் தவான் 187 ரன்கள் எடுத்ததே இந்திய வீரர் ஒருவரின் அறிமுக டெஸ்ட் போட்டியில் எடுத்த அதிகபட்ச ரன்களாகும். இதனை முறியடிக்கும் வாய்ப்பு இருந்தும் தவறவிட்டுவிட்டார் ஜெய்ஷ்வால். இருப்பினும் அவருடைய பெயரில் பல சாதனைகள் பதிவாகியுள்ளது.
அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்த தொடக்க ஆட்டக்காரர்கள் பட்டியலில் ஏற்கனவே இருக்கும் ஷிகர் தவான் மற்றும் பிரித்திவி ஷாவுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெயரும் இணைந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு மொஹாலியில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தவான் சதம் விளாசியதுடன் 187 ரன்கள் எடுத்து ஆவுட்டானார். இதேபோல் பிரித்வி ஷா 2018ல் ராஜ்கோட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம் விளாசி 134 ரன்களுக்கு அவுட்டானார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அறிமுக போட்டியிலே சதம் அடித்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையையும் ஜெய்ஸ்வால் பெற்றார். ரோகித் சர்மா (177 – கொல்கத்தா, 2013) மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் இந்த சாதனையை எட்டிய மற்ற இரண்டு பேட்ஸ்மேன்கள். யஷஸ்வி ஜெய்ஸ்வால் இப்போது வெளிநாட்டில் டெஸ்ட் அரங்கில் அறிமுகமான 7வது இந்திய பேட்ஸ்மேன் ஆவார். இது 13 ஆண்டுகளில் முதல் முறையாகும். 2010ல் இலங்கைக்கு எதிராக 120 ரன்கள் எடுத்த சுரேஷ் ரெய்னா, இந்தியாவுக்கு வெளியே சாதனை படைத்த கடைசி இந்தியர் ஆவார்.
அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்த 17வது இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிகபட்ச தொடக்க விக்கெட் பார்ட்னர்ஷிப் என்ற பெருமையையும் ரோகித் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றனர். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் வாசிம் ஜாபர் மற்றும் சேவாக்கின் 17 ஆண்டுகால சாதனையை முடிவுக்கு கொண்டு வந்தனர். வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அந்த அணிக்கு எதிராக அறிமுக போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் ஆவார்.