தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண விழாவில் தாம்பூலப் பைக்கு பதிலாக வித்தியாசமாக புத்தகப்பைகள் வழங்கப்பட்டுள்ளன.
வழக்கமாக திருமண விழாக்களுக்கு வருபவர்களுக்கு தாம்பூலப் பையில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய் போன்றவை வழங்கப்படுவது வழக்கம்.

சமீப காலமாக அதற்கு மாற்றாக மரக்கன்றுகள், விதைப்பந்துகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், தஞ்சையைச் சேர்ந்த கீர்த்தி – தினேஷ் தம்பதியினர், 25 புத்தகங்கள் அடங்கிய 650 ரூபாய் மதிப்பிலான புத்தகப்பையினைத் தங்கள் திருமணத்துக்கு வருகை புரிந்தவர்களுக்கு அன்பளிப்பாக அளித்துள்ளனர்.

என்ற தந்தை பெரியாரின் மேற்கோள் எழுதப்பட்ட அந்தப் புத்தகப்பையில் காதல் திருமண விழா என்று அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும், பெரியார், அம்பேத்கர், சேகுவேரா, திருக்குறள் உட்பட 25 புத்தகங்கள் அப்பையில் இருந்துள்ளன. ஒரு புத்தகப்பையின் மதிப்பு ரூ. 650. மொத்தம் 200 புத்தகப்பைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது. இதற்கான செலவினை மணமகள் கீர்த்தி தனது சேமிப்பிலிருந்து செய்துள்ளார்.
இதுகுறித்து கீர்த்தியிடம் தொடர்புகொண்டு பேசினேன், “எனக்கு புத்தக வாசிப்பு ஏற்படக் காரணம் என் அண்ணன் தினேஷ் குமார் தான். முதன்முதலாக ’பெண் ஏன் அடிமையானாள்’ புத்தகத்தினைப் பரிசளித்தார். அது என்னில் ஏற்படுத்திய தாக்கம்தான் புத்தக வாசிப்பிற்கு அழைத்து வந்தது. எனக்குக் கிடைத்த புத்தக அறிவினை அனைவரிடமும் பகிர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் திருமண ஏற்பாடு என்று பேச ஆரம்பிக்கும் போதே அதன் செலவில் 20% புத்தகத்துக்குச் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டேன்” என்கிறார் கீர்த்தி.

இவ்வாறு முடிவு செய்த பின்னர், நன்செய் பதிப்பகத்தில் விலையடக்கப் பதிப்பின் மூலம் புத்தகத்தைப் பெற்றதாகத் தெரிவித்தார். தன் சகோதரர் மற்றும் நன்செய் பதிப்பகத்தின் உதவியாலே இது சாத்தியப்பட்டது என்பவர், பலர் நூல்களை வாங்கித் தூக்க முடியாமல் தூக்கிச் சென்றது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். சமூகத்துக்குத் தேவையான சமத்துவத்தை வலியுறுத்தும் கருத்துகளைத் தன்னால் பிறர் வாசிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார். உயர்ந்த நோக்கம் கொண்ட இந்த மணமக்களுக்கு வாழ்த்துகள்.