அறிமுக போட்டியில் அசாருதீன், கங்குலியின் சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்

டொமினிகா,

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் அறிமுக வீரராக கால்பதித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் சதம் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்தார். அவர் 387 பந்துகளில் 171 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் தற்போது பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். அதாவது,

* அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்த 17-வது இந்தியராக சாதனை பட்டியலில் ஜெய்ஸ்வால் இணைந்தார். மேலும் ஷிகர் தவான் (187 ரன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக), பிரித்வி ஷா (134 ரன், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) ஆகியோருக்கு பிறகு தனது முதல் டெஸ்டிலேயே செஞ்சுரியை ருசித்த 3-வது இந்திய தொடக்க ஆட்டக்காரர் இவர் தான்.

* ஜெய்ஸ்வால் மொத்தம் 387 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். இதன் மூலம் அறிமுக டெஸ்டிலேயே அதிக பந்துகளை சமாளித்த இந்தியர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு முகமது அசாருதீன் 1984-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தனது அறிமுக டெஸ்டில் 322 பந்துகளை (110 ரன்) சந்தித்ததே அதிகபட்சமாக இருந்தது. அவரது 39 ஆண்டுகால சாதனையை ஜெய்ஸ்வால் தகர்த்துள்ளார்.

* வெளிநாட்டு மண்ணில் அறிமுக டெஸ்டில் அதிக ரன் விளாசிய இந்தியராகவும் ஜெய்ஸ்வால் திகழ்கிறார். 1996-ம் ஆண்டு லண்டன் லார்ட்சில் இங்கிலாந்துக்கு எதிராக சவுரவ் கங்குலி 131 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக நீடித்தது. கங்குலியின் 27 ஆண்டு கால இச்சாதனையையும் ஜெய்ஸ்வால் காலி செய்து விட்டார்.

மும்பையைச் சேர்ந்த 21 வயதான ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘சதத்தை எட்டியது, எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உணர்வுபூர்வமான தருணமாகும். இந்த சதத்தை பெற்றோருக்கு அர்ப்பணிக்கிறேன். எனது கிரிக்கெட் பயணத்தில் பக்கபலமாக இருந்து இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு அவர்கள் தான் காரணம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இது வெறும் தொடக்கம் தான். தொடர்ந்து இதே போன்று சிறப்பாக விளையாட வேண்டியது அவசியமாகும்’ என்றார். அவருக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.