கோவை: கரோனாவுக்கு பின் விவசாயத்தில் கடந்த மூன்றாண்டுகளாக லாபம் ஈட்டப்படாத நிலையில், தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை வைத்து விவசாயிகளை விமர்சனம் செய்வது ஏற்புடையதல்ல, விவசாயிகள் லாபம் ஈட்டினால் ஆதரவு மட்டுமே தெரிவிக்க வேண்டுமென கோவை மாவட்ட தக்காளி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், நாச்சிபாளையம், உடுமலை, கிணத்துக்கடவு, கொடுவாய் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிகளவு விளைவிக்கப்படுகிறது. தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மிகக் குறுகிய காலம் மட்டுமே கிடைக்கும் இந்த லாபத்தை மட்டும் வைத்து விவசாயிகளை விமர்சனம் செய்வது ஏற்புடையதல்ல என்றும், அரசியல் கட்சிகள் உள்ளிட்டவை தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தக்காளி பயிரிடும் விவசாயிகள் சிவக்குமார், துரை உள்ளிட்டோர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: கரோனா நோய் தொற்று பரவலுக்கு பின் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்றாண்டுகளாக விவசாய பொருட்களுக்கு லாபம் கிடைக்கவில்லை. விவசாயி நஷ்டத்தை எதிர்கொண்டால், அதுகுறித்து மக்கள் கவலை கொள்வதில்லை.
மாறாக, விவசாயப் பொருட்கள் குறுகிய காலத்துக்கு விலை உயர்ந்தால், உடனே விவசாயி குறித்து விமர்சனம் செய்யத் தொடங்கி விடுகின்றனர். பெட்ரோல், டீசல், சினிமா தியேட்டர் டிக்கெட் விலை உயர்ந்தால், அதுகுறித்து யாரும் இந்த அளவுக்கு விமர்சனம் செய்வதில்லை.
நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயி, லாபத்தை எதிர்கொண்டால் அதை வரவேற்கும் மனநிலை மக்கள் மத்தியில் எழ வேண்டும். ஓர் ஏக்கர் விளைவிக்க ரூ.1 லட்சம் செலவிட வேண்டியுள்ளது. பயிர்களில் வைரஸ் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை விவசாயிகள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இன்றுகூட கோவை மாவட்டத்தில் தக்காளி விளைவித்த அனைத்து விவசாயிகளும் லாபம் ஈட்ட முடியவில்லை. 100-ல் ஒருவருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை குறைய குறைந்தபட்சம் 40 நாட்களாகும்.
கடந்த மாதத்தில் காற்றின் காரணமாக 10 ஆயிரம் வாழைகள் சேதமடைந்து, அனைத்து விவசாயிகளும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். எதிர்வரும் மாதங்களில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.10 அல்லது ரூ.5-க்கு கூட குறைந்து விற்பனை செய்யும் நிலை ஏற்படலாம்.
தங்கத்தின் விலை அதேபோல குறையுமா? இதையெல்லாம் மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். விவசாயிகளுக்கு அனுதாபம் தேவையில்லை. அரசியல் கட்சிகள், பொதுமக்களின் ஆதரவு மட்டும் இருந்தால் போதும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.