வேலூர்: இந்த தக்காளிக்கு வந்த வாழ்வை பார்த்தீங்களா? நம்மையே கிறுகிறுக்க வைத்து கொண்டிருக்கிறது.. அதுவும் வேலூர் மாவட்ட நிகழ்வை பார்த்து நெட்டிசன்களே வாயடைத்து போய் உள்ளனர்.
தக்காளியின் விலை நாட்டில் பல்வேறு மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருப்பதால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தக்காளி: தக்காளி இல்லாமலேயே குழம்புகளை வைத்து கொண்டிருக்கிறார்கள்.. யூடியூபில் தக்காளி இல்லாத ரெசிபி வகைகளையே தேடிக் கொண்டுமிருக்கிறார்கள்.. ஹோட்டல்களில் தக்காளி சட்னியே அரைப்பது கிடையாதாம்.
இது ஒருபுறமிருக்க, இந்த தக்காளியால் ஏகப்பட்ட பஞ்சாயத்துகளும், விநோத சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன.. மத்தியப் பிரதேசத்தில் தக்காளியால் சண்டை ஏற்பட்டு ஒரு குடும்பமே பிரிந்துவிட்டது.. தன்னுடைய மனைவியிடம் கேட்காமல் 2 தக்காளிகளை எடுத்து சமையலுக்கு பயன்படுத்திவிட்டாராம் கணவர்.. இதனால், அந்த மனைவி கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.
கண்ணீர்: அந்த மனைவியை 3 நாட்களாக காணோம் என்று கண்ணீருடன் தேடி கொண்டிருக்கிறார் கணவர்.. போலீசிலும் புகார் தந்தார்.. இப்போது, அந்த மனைவி வீடு திரும்பிவிட்டாரா? இல்லையா? என்றே தெரியவில்லை.
இதேபோல, ஒரு செல்போன் கடையில், ஸ்மார்ட்போன் வாங்கினால் 2 கிலோ தக்காளி இலவசம் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது.. இதை பார்த்ததுமே, அந்த பகுதியில் உள்ள மற்ற கடைகளும் ஸ்மார்ட்போன் வாங்கினால் தக்காளி இலவசம் என்று அறிவிக்கும் அளவுக்கு நிலைமை சென்றன.. உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில், ஒரு காய்கறி வியாபாரி தன்னுடைய கடைக்கு தக்காளியை பாதுகாப்பதற்காக பவுன்சர்களை நியமித்த அதிசயமும் நடந்துள்ளது.
அலப்பறை: இப்படி தக்காளியால் வடமாநிலங்களில் ஏகப்பட்ட அலப்பறைகள் நடந்து கொண்டிருக்கும்போது, நம்முடைய வேலூர் மாவட்டத்தில் அதிசய நிகழ்வு ஒன்று அரங்கேறி உள்ளது.
பள்ளிகொண்டா: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், காமாட்சி அம்மன் பேட்டையை சேர்ந்தவர் பினாங்குகாரர்.. இவர் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.. ஆனால், ஆடி மாதம் இப்போது வரப்போகிறது.
புதிதாக திருமணமானதால், ஒரு வருடத்துக்கு முன்பாக, கல்யாணப்பெண்ணை, தாய் வீட்டார் சீர்வரிசைகளை வைத்து, மணமகன் இல்லத்தில் இருந்து தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம்.. ஆடி மாதம் முடியும் வரை அம்மா வீட்டில் வைத்திருந்து, அதற்கு பிறகு ஒரு நல்லநாள் பார்த்து புகுந்த வீட்டிற்கு பெண்ணை அனுப்பி வைப்பார்கள்.. அப்படித்தர்ன, பள்ளிகொண்டாவை சேர்ந்த பெண் வீட்டார் வரும் 17-ந் தேதி ஆடி மாதம் பிறப்பதை முன்னிட்டு, பிறந்தவீட்டு சீர் வரிசையை வைத்திருந்தனர்.
ஜம் ஜம் தக்காளி: ஆப்பிள், அன்னாசிப்பழம், மாம்பழம், வாழைப்பழம் போன்றவைகள் தட்டில் வைக்கப்பட்டிருந்தன.. அங்கே பார்த்தால், சிவப்பு கலரில் “நம்ம தக்காளி”யும் ஒரு தட்டில் ஜம்மென்று உட்கார்ந்து கொண்டிருக்கிறது..
தக்காளி விலை உயர்வால், தக்காளிக்கும் மவுசு எகிறிவிட்டது.. அதனால், தக்காளி பழத்தையும் தட்டில் வைத்து பெண்ணை அழைத்துச்சென்றனர். இதர பழங்களுடன் தக்காளிப்பழமும் சீர்வரிசை தட்டில் இடம்பெற்றிருந்தது வியப்பாக இருந்தது. இந்த பள்ளிக்கொண்டா தக்காளி தட்டுதான் இணையத்தில் வேகமாக உருண்டுகொண்டிருக்கிறது.