சென்னை: சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், யோகி பாபு, மிஷ்கின் நடித்துள்ள ‘மாவீரன்’ நேற்று வெளியானது.
மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸானது.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள மாவீரன் படத்துக்கு பாக்ஸ் ஆபிஸிலும் சூப்பர் ஓபனிங் கிடைத்துள்ளது.
இந்நிலையில், மாவீரன் கொரியன் படத்தின் காப்பி என ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மாவீரன் கொரியன் படத்தின் காப்பியா?:சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா, மிஷ்கின், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரின்ஸ் படத்தில் விட்டதை மாவீரனில் எட்டிப் பிடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அவருக்கு சூப்பரான கம்பேக் கொடுத்துள்ள மாவீரன், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் மட்டுமே 10 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான மாவீரன், முதல் நாளிலேயே 10 கோடி வரை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களுக்காக மாவீரனாக மாறும் ஒரு கோழை ஹீரோவின் கதை தான் மாவீரன்.
தமிழ் சினிமாவில் ஏற்கனவே பார்த்து பழகிய கதை தான் என்றாலும், அதனை சிவகார்த்திகேயன் நடிப்பில் கொஞ்சம் வித்தியாசப்படுத்தி விருந்து படைத்துள்ளளார் இயக்குநர் மடோன் அஸ்வின். காமெடி, சென்டிமெண்ட், ஆக்ஷன், சமூகப் பிரச்சினை, அரசியல் என அனைத்தும் சேர்ந்த கமர்சியல் படமாக மாவீரன் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மாவீரன் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்த கொண்டாட்டத்தை ஆட்டோ பாம் வைத்து தகர்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். ஏற்கனவே மாவீரன் விமர்சனத்தில் இயக்குநர் மடோன் அஸ்வின், சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவை வெளுத்து வாங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது மாவீரன், கொரியன் படத்தின் காப்பி என ஆதாரத்துடன் பகிரங்கப்படுத்தியுள்ளார். இதுகுறித்து டிவிட் செய்துள்ள அவர், சில கேரக்டர்களை மட்டும் மாற்றிவிட்டு அப்படியே கொரியன் படத்தை காப்பியடித்துள்ளது மாவீரன் என குறிப்பிட்டுள்ளார்.

2020ம் ஆண்டு வெளியான ஹிட்மேன் ஏஜென்ட் ஜூன் என்ற கொரியன் படத்தின் காப்பி தான் மாவீரன் எனவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், இதற்கு காப்பி ரைட்ஸ் கூட வாங்காமல் மாவீரன் படத்தை எடுத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஹிட்மேன் ஏஜென்ட் ஜூன் படத்தை அப்படியே காப்பி செய்து, மாவீரனில் பேஸ்ட் செய்துள்ளனர் எனவும் ப்ளூ சட்டை மாறன் விளாசியுள்ளார்.
இந்நிலையில், ப்ளூ சட்டை மாறனின் டிவிட்டரில் கமெண்ட்ஸ் செய்துள்ள சிவகார்த்திகேயன் ரசிகர்கள், காமிக்ஸ் ஆர்ட்டிஸ் கேரக்டர் மட்டும் தான் காப்பி, மற்றபடி கதை கொரியன் படத்தோட காப்பி இல்லை எனக் கூறியுள்ளனர். மேலும், ப்ளூ சட்டை மாறனுக்கு எப்போதுமே இப்படி கலாய்ப்பது தான் வேலை என அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.