தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வந்த நடிகை தமன்னா, இப்போது பாலிவுட் மற்றும் வெப்சீரிஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார். இது தவிர, அவர் இப்போது விஜய் வர்மா என்ற நடிகரைக் காதலித்து வருகிறார். ஆரம்பத்தில் இக்காதல் குறித்து இருவரும் எதுவும் தெரிவிக்காமலிருந்தனர். ஆனால் இப்போது இருவரும் அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளனர். வெப்சீரிஸிலும் இரண்டு பேரும் சேர்ந்து நடித்துள்ளனர். நெட்பிளக்ஸில் வெளியான ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ என்ற வெப்சீரியஸில் தனது காதலனோடு தமன்னா நடித்துள்ள எபிசோடு இணையத்தில் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.

திரைப்படங்களில் சக நடிகர்களுடன் நெருக்கமான காட்சியில் நடிக்கமாட்டேன் என்ற கொள்கையைத் தனது காதலனுக்காகத் தளர்த்திக்கொண்டுள்ளார் தமன்னா. ஆனால் ஒரு தரப்பினர், அந்த வெப்சீரிஸ் வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக இருவரும் விளம்பரத்திற்காக இவ்வாறு செய்வதாக விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் அது தவறு என்று விஜய் வர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம் என்பதை நாங்கள் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளோம். நான் மகிழ்ச்சியாகவும், ஒரு வித உச்சபட்ச அன்போடும் அவரை காதலிக்கிறேன். நான் வில்லன் சகாப்தத்திலிருந்து காதல் சகாப்தத்திற்கு மாறிவிட்டேன்” என்று காதலில் விழுந்ததைக் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை தமன்னா, விஜய் வர்மாவைக் காதலிக்கத் தொடங்கியதைப் பற்றிப் பேசுகையில், “நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர் மிகவும் அற்புதமான மனிதர். அதோடு எனக்கு நிகரான பார்ட்னர். அவர் வாழ்க்கையில் பல வலிமையான பெண்கள் இருப்பதாக நினைக்கிறேன். அதுதான் தேவை என்று நினைக்கிறேன். வலிமையான பெண்களை மதிக்கும் ஒருவர் தனக்கான பெண்ணையும் மதிப்பார் என்று நான் நினைக்கிறேன். இதைத்தான் இளைய தலைமுறை கற்றுக்கொள்ளவேண்டும். பெண்கள் தங்களைச் சுற்றி இருக்கும் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கேட்பதற்குப் பதில், பெண்களை எப்படி நடத்தவேண்டும் என்று மகன்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.
முந்தைய பேட்டியில், விஜய் வர்மாதான் தனது மகிழ்ச்சியின் முகவரி என்றும் குறிப்பிட்டு இருந்தார் தமன்னா.