சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
1996ல் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி வருகிறது.
இந்தியன் முதல் பாகத்தில் கமல் நடித்திருந்த ‘இந்தியன் தாத்தா’ கேரக்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்த கேரக்டரில் கமல் ஸ்டைலிஷாக நடித்திருந்தது குறித்து இயக்குநர் ஷங்கர் மனம் திறந்து பேசியுள்ளார்.
கமலின் ஸ்டைலை பார்த்து மிரண்ட ஷங்கர் உலகநாயகன் கமல் – பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணி முதன்முறையாக இணைந்த திரைப்படம் இந்தியன். 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. சேனாதிபதி, சந்துரு என இரண்டு கேரக்டர்களில் நடித்து மிரட்டியிருந்தார் கமல். இதில் சேனாதிபதி என்ற இந்தியன் தாத்தா கேரக்டர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இதே இந்தியன் தாத்தா கேரக்டர் தற்போது உருவாகும் 2ம் பாகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இந்தியன் தாத்தா கேரக்டரை திரையில் பார்க்க ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்தியன் முதல் பாகத்தில் கமல்ஹாசனின் நடிப்பு குறித்து இயக்குநர் ஷங்கர் மனம் திறந்துள்ளார்.
குறிப்பாக ஒரு சண்டைக் காட்சியில் அவரது ஸ்டைலான நடிப்பு தன்னை மிரள வைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கொலை செய்தது சேனாதிபதி தான் என கண்டுபிடிக்கும் நெடுமுடி வேணு, அவரை அரெஸ்ட் செய்வதற்காக தனியாக செல்வார். அப்போது ஈஸி செயரில் உட்காந்திருக்கும் கமல், நெடுமுடி வேணுவை அசால்டாக அடித்து துவம்சம் செய்வார்.
வர்மக் கலையை பயன்படுத்தி நெடுமுடி வேணுவை அட்டாக் செய்யும் கமல், நெற்றியில் விழும் தனது முடியை ஸ்டைலாக விளக்கிவிடுவார். பின்னர் கீழே விழுந்த துண்டை எடுத்து தனது தோளில் போடுவார். இந்தக் காட்சியை கமலுக்கு விவரித்த ஷங்கர், அதில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைல் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி விளக்கியுள்ளார்.
ரஜினிக்காகவே எழுதியதை போல இருந்த அந்த காட்சியை கமலிடம் தயங்கி தயங்கி கூறியுள்ளார் ஷங்கர். ஆனால், ஷாட் ஓக்கே என்றதும் கமல் கொடுத்த எக்ஸ்பிரஷனும் அந்த ஸ்டைலும் ஷங்கருக்கு சிலிர்ப்பை கொடுத்துள்ளது. செம்ம ஸ்டைலாக முடியை நெற்றியில் இருந்து விளக்கிய கமல், கீழே விழுந்த துண்டையும் நச்சென்று தூக்கிப் போட்டு தோளில் விழ வைத்துள்ளார்.
இதனைப் பார்த்த ஷங்கர் கமலின் நடிப்பை பார்த்து மிரண்டுவிட்டாராம். இந்த சம்பவம் குறித்து இயக்குநர் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.