சென்னை: சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள ‘மாவீரன்’ இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.
மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸானது.
அதிக எதிர்பார்ப்பில் வெளியான மாவீரன் படத்துக்கு முதல் இரண்டு நாட்களில் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.
இதனால், உலகம் முழுவதும் சிறப்பான வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாவீரன் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ்: சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் இந்த வாரம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு முதல் இரண்டு நாட்களில் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. மடோன் அஸ்வின் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா, மிஷ்கின், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அதிக எதிர்பார்ப்புடன் வெளியான மாவீரன் திரைப்படம், சிவகார்த்திகேயனுக்கு சூப்பரான கம்பேக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடைசியாக வெளியான பிரின்ஸ் சிவகார்த்திகேயன் கேரியரில் மிக மோசமான தோல்வியைத் தழுவியது. இதனை தற்போது மாவீரன் திரைப்படத்தில் மீட்டெடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். ஆக்ஷன் ப்ளஸ் கமர்சியல் ட்ரீட்டாக வெளியான மாவீரன் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மக்களுக்காக மாவீரனாக மாறும் ஒரு காமிக்ஸ் ஆர்ட்டிஸ்ட் கேரக்டரில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே பார்த்து பழகிய கதை தான் என்றாலும், சிவகார்த்திகேயனும் இயக்குநர் மடோன் அஸ்வினும் கொஞ்சம் வெரைட்டியாக எடுத்து விருந்து படைத்துள்ளனர். இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் மாவீரன் திரைப்படம் மாஸ் காட்டி வருகிறது. 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் இரண்டே நாட்களில் 20 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
முதல் நாளில் தமிழ்நாட்டில் 7 முதல் 8 கோடி வரை வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் 10 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளது. அதேபோல், இரண்டாவது நாளிலும் உலகம் முழுவதும் 10 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். முதல் இரண்டு நாட்களிலேயே 20 கோடி வரை வசூல் செய்துவிட்ட மாவீரன், முதல் வாரம் முடிவில் மொத்த பட்ஜெட்டையும் கலெக்ஷன் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவீரன் படத்துக்கு முதல் நாளில் கிடைத்த பாசிட்டிவான விமர்சனத்தால், இரண்டு நாட்களும் ரசிகர்களிடம் இருந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. இன்று வார இறுதிநாள் என்பதால் மாவீரன் கலெக்ஷன் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் ரிலீஸாகும் வரை மாவீரன் நான் ஸ்டாப்பாக வசூலிக்கும் என சொல்லப்படுகிறது.