சென்னை: மாலத்தீவில் ஓய்வு எடுத்து வரும் ரஜினிகாந்த் ரிலாக்ஸாக நடந்து செல்லும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
நெல்சன் தீலிப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில் தமன்னா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர்.
முதல் சிங்கிள் காவாலா: இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான காவாலா பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலுக்கு தமன்னா நடனமாடியிருந்தார். அருண்ராஜா காமராஜ் பாடலை எழுதியிருந்தார். ஷில்பா ராவ், அனிருத் இணைந்து பாடியிருந்தனர்.
ரஜினியின் இமேஜை நிலைநிறுத்தும் பாடல்: இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான Hukum பாடல் நேற்று வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்தப் பாடல் ரஜினியின் சூப்பர் ஸ்டார் இமேஜை நிலைநிறுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதனையடுத்து இந்தப் பாடலின் வரிகளை ரஜினி ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். ஏனென்றால், சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை நிலவி வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பாடல் உருவாகி உள்ளது.
அடுத்தடுத்த படங்களில்: இந்தபடத்தைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் ரஜினி நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கான படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. அடுத்து அவர் ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார். இந்த படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இயக்குநர் ஞானவேல் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
மாலத்தீவில் ரஜினி: இந்நிலையில், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்றதையடுத்து சின்ன ப்ரேக் எடுத்துள்ள ரஜினிகாந்த். மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் அவர் ரிலாக்ஸாக நடந்து வரக்கூடிய புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.