சென்னை: ஜெயிலர் திரைப்படம் இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் கதை இணையத்தில் வெளியாகி உள்ளது.
ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர்
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.
ரஜினியின் ஜெயிலர்: ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இம்மாத இறுதியில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
காவாலா: தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக இப்படம் ஆகஸ்ட் 10ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான காவாலா பாடல் கடந்த ஜூலை 6ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலுக்கு தமன்னா நடனமாடியிருந்தார்

ஹூக்கும் பாடல்: இதையடுத்து, ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலான ஹூக்கும் பாடல் வெளியானது. அனிருத் பாடியுள்ள பாடலை சூப்பர் சுப்பு எழுதியுள்ளார். முழுக்க முழுக்க மாஸான பாடல் வரி ரசிகர்களை மிரட்டி உள்ளது. நிலவரம் புரியுதா உட்காருடா..தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா.. பாடலின் நடுவில் ரஜினியின் மாஸ் நடையும், ஸ்டைலும் சும்மா தெறியாக பாடல் உள்ளதால், பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ரஜினியை வைத்து தரமான சம்பவம்: இந்நிலையில், ஜெயிலர் படத்தின் கதை இணையத்தில் லீக்காகி உள்ளது. அதன் படி கேங்ஸ்டர் ஒருவர் தனது சகாக்களுடன் ஜெயிலில் இருந்து தப்பித்து செல்ல மாஸ்டர் பிளான் போடுகின்றனர். அவர்களது திட்டத்துக்கு ஜெயிலர் முத்து பாண்டியன் தடையாக இருக்கிறார். அவர்களது திட்டத்தை ஜெயிலர் எப்படி முறியடிக்கிறார் என்பதே படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்த கதையை கேட்டு குஷியான ரசிகர்கள் ரஜினியை வைத்து தரமான சம்பவம் பண்ணி இருக்கிறார் நெல்சன் என்று படத்தை திரையில் காண ஆர்வமாக உள்ளனர்.