சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள கொலை படத்திற்கு VFX-க்கு மட்டும் பலகோடி செலவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இசையமைப்பாளர், கதாநாயகன் என்பதை தாண்டி விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி இயக்குனராக அவதாரமெடுத்தார்.
வித்தியாசமான கதை அம்சத்தைக் கொண்ட பிச்சைக்காரன் 2 படம் தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபிஸில் நன்றாக கல்லாக்கட்டி வந்தது. இந்த படத்தில் காவ்யா தபார், ஒய்.ஜி.மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், யோகி பாபு, ராதா ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கொலை: பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் கொலை. இப்படத்தை, பாலாஜி கே.குமார் இயக்கி உள்ளார்.இதில் ரித்விகா சிங்,ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் சம்கித் போஹ்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லைலாவின் மர்ம மரணம்: இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த ஆண்டே வெளியாகி கவனம் ஈர்த்தது. ஹாலிவுட் தரத்திலான மேக்கிங், இசை மற்றும் ஒளிப்பதிவு சமூக வலைதளங்களில் பேசப்பட்டன. மர்டர் மிஸ்டரி த்ரில்லர் பாணியில் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது. அதில், எவ்வளவுதான் வாழ்க்கையில ஜெயிச்சாலும் சாவுக்கிட்ட தோற்றுத்தான் போவோம் என்ற வசனத்துடன் டிரைலர் தொடங்குகிறது. லைலாவின் மர்ம மரணம் அதைத் தொடர்ந்து நடக்கும் கொலை என டிரைலர் மிரட்டலாக உள்ளது.

பல கோடி செலவு: இந்நிலையில், கொலை திரைப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானத் திரைப்படம் என்றும், அதில் VFX-க்காக மட்டுமே ரூ.3 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வெளியானதும், அப்படி இந்த படத்தில் என்ன இருக்கு என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.