தப்பிய பெங்களூரு… பயங்கரவாத தாக்குதல் நடத்த சீக்ரெட் பிளான்… சிக்கிய 5 பேர் யார்?

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இன்று காலை 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருட்கள் மற்றும் சில ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒருவேளை பெங்களூரு நகரில் வெடி வைத்து பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டம் தீட்டியிருந்தார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பெங்களூருவில் பெரும் அதிர்ச்சி

இதனால் அந்த 5 பேரும் தீவிரவாதிகளா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருவேளை பெங்களூருவில் தாக்குதல் நடத்தியிருந்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும்.

எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்

கடந்த இரண்டு நாட்களாக 2024 மக்களவை தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. நேற்று மாலை தான் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர். இதற்கு அடுத்த நாளே தீவிரவாதிகள் சதித்திட்டம் என்ற சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாத தாக்குதல்

ஒருவழியாக பெங்களூருவில் நடக்கவிருந்த தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டிருப்பதாக பேசத் தொடங்கியுள்ளனர். உளவுத்துறை அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில் தான், மேற்குறிப்பிட்ட 5 பேரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் அந்த 5 பேர்?

கைது செய்யப்பட்ட நபர்கள் சையது சுஹெல், உமர், ஜனித், ஸாஹித், முதசீர் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் யார் என விசாரிக்கையில், 2017ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள்.

பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தவர்கள்

இதற்காக கைது செய்யப்பட்டு சில ஆண்டுகள் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் இருந்தனர். இங்கு ஏதேனும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த நபர்களுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம். அதன் விளைவாக பெங்களூருவில் பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெடிப் பொருட்களின் தன்மை என்ன? அவை எங்கிருந்து கிடைத்தது? இந்த 5 பேரும் எங்கெல்லாம் தங்கியிருந்தனர்? யாருடன் தொடர்பு கொண்டனர்? போன்ற விவரங்களை சேகரிக்கும் பணியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.