இம்பால்: சுமார் 3 மாதங்களாக மணிப்பூரில் பழங்குடியினருக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், 2 பெண்களை மைதேயி சமூக இளைஞர்கள் சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்று கும்பலாக பலாத்காரம் செய்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது.
பாஜக ஆளும் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த சுமார் 3 மாதங்களாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. அம்மாநிலத்தில் வசிக்கும் குகி பழங்குடியின மக்களுக்கு எதிராக மைத்தேயி சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மைதேயி சமுதாயத்தினர் தங்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கக்கோரி அரசிடம் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு எதிராக குகி மற்றும் நாகா பழங்குடியின மக்கள் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி நடத்திய போராட்டத்தை தொடர்ந்து அம்மாநிலத்தில் குகி பழங்குடி மக்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது.
பள்ளத்தாக்கில் வசித்து வரும் பெரும்பான்மை மக்களான மைதேயி சமுதாயத்தினர் குகி சமுதாயத்தினர் மீது கொடூர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தாக்குதலில் பல ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.
இதுவரை 135 பேர் உயிரிழந்து இருப்பதாக அரசு வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பலி எண்ணிக்கை 500க்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து இருக்கிறார்கள். பாதுகாப்பு முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
பாதுகாப்பு நடவடிக்கைக்காக 50 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளார்கள். தினமும் தீ வைப்பு, துப்பாக்கிச்சூடு, வன்முறை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. வன்முறையை கட்டுப்படுத்தும் வகையில் மணிப்பூரில் இணையதள சேவை மாதக்கணக்கில் துண்டிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் நாடே அதிர வைக்கும் சம்பவம் மணிப்பூரில் அரங்கேறி உள்ளது. காங்கோக்பி என்ற மாவட்டத்தில் பி பைனோ கிராமத்தில் மைதேயி சமூகத்தை சேர்ந்த ஆண்கள் குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை கொடூரமாக தாக்கி அவர்களை முழு நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றனர்.
அங்கு ஏராளமான ஆண்கள் அந்த 2 பெண்களையும் கூட்டாக பலாத்காரம் செய்து இருக்கிறார்கள். பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொடூர சம்பவம் கடந்த மே 4 ஆம் தேதி நடந்ததாக ITLF என்ற பழங்குடியின அமைப்பு தெரிவித்து உள்ளது.
மணிப்பூரில் இணையதள இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருப்பதுடன் குற்றம் செய்ததற்கான ஆதாரங்களை மைதேயி சமூகத்தினர் அழித்து வருவதால் இதுபோன்ற பல்வேறு கோடூரங்கள் வெளியில் வராமலேயே புதைக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து இருப்பதாகவும், ஆனால் கைது தொடர்பாக எந்த தகவலும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் நடந்த தினத்தில் வன்முறை கும்பல் வீட்டை எரித்து, அதிலிருந்து தப்பிச்சென்ற 2 ஆண்கள், 3 பெண்களை பிடித்தனர். அதில் ஒரு ஆணை கொன்ற கும்பல் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கியதுடன், 20 வயது இளம் பெண்ணை கும்பலாக பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த முயன்ற சகோதரர் அடித்து கொல்லப்பட்டு உள்ளார்.