பந்தை பாஜக பக்கம் பாஸ் செய்த ஓபிஎஸ்: முடிவு அவங்க கையில் தான் இருக்கு!

அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரித்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் கூறுகிறார், அதிமுக ஒருங்கிணைப்பாளராக தன்னை அங்கீகரித்துள்ளது என்று ஓ.பன்னீர் செல்வம் ஒருபக்கம் கூறுகிறார். அதிமுகவை ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்துக் கொண்டிருக்கும் நிலையில் பாஜக எந்த பக்கம் இருக்கிறது என்பதைப் பொறுத்தே யாருக்கு வெற்றி என்பது உறுதியாகும்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமியை அழைத்து அந்த பக்கம் ஒரு குத்து, அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஓபிஎஸ் மகனை அழைத்து இந்த பக்கம் ஒரு குத்து என யாருக்கும் பாதகம் இல்லாமல் பயணிக்கிறது பாஜக.

இந்த சூழலில் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த ஓ.பன்னீர்செல்வத்தை செய்தியாளர்கள் சூழ்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

தேஜகூ ஆலோசனை கூட்டத்துக்கு நீங்கள் செல்லவில்லையே என்று கேட்டபோது, “அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எனக்கு அழைப்பு வரவில்லை. அதனால் செல்லவில்லை. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என இன்னும் என்னைத்தான் தேர்தல் ஆணையம் கூறுகிறது. இது பற்றி உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன். ஆனால், புரியவேண்டியவர்களுக்கு புரியவில்லை.

பெரியகுளத்து பெரிய மனசுக்காரர் ஓபிஎஸ்

பாஜகவுடனான கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து வருகிறோம். அவர்களாக கூட்டணியை முறித்துக்கொள்ளும் வரையில் அந்த கூட்டணியில் தொடருவோம்”என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

“மணிப்பூர் கலவரத்தை நிறுத்தி, நிரந்தர அமைதி ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். கொலை போன்ற குற்றச்செயல்களை தடுப்பது மாநிலத்தின் கடமையாக இருக்கவேண்டும்” என்று கூறினார்.

திமுக அமைச்சர்களை குறிவைத்து அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருவது குறித்து கேள்வி எழுப்பட்ட போது, “திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை எதிர்கொண்டு வெற்றி அடைய வேண்டியது அவர்களின் பொறுப்பு” என்றார்.

ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட திட்டம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “ஓ.பி.ரவீந்திரநாத் தகுதி நீக்கம் குறித்து நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.