மணிப்பூர் சம்பவம்… இந்த தவறுக்கு மன்னிப்பே கிடையாது… பிரதமர் மோடி கடும் வேதனை!

மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) தொடங்கியது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த கூட்டத்தொடர் கடும் அமளிக்கு மத்தியில் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது. ஒருநாள் கூட ஆக்கப்பூர்வமாக விவாதங்கள் முன்னெடுக்கப்படாமல் மக்களின் வரிப்பணம் தான் வீணானது.

மழைக்கால கூட்டத்தொடர்

எனவே இம்முறையாவது சிறப்பான முறையில் கூட்டத்தொடர் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அணையாமல் பற்றி எரியக்கூடிய விஷயமாக மணிப்பூர் காணப்படுகிறது. மறுபுறம் விலைவாசி உயர்வு, எதிர்க்கட்சிகள் மீதான ரெய்டு அஸ்திரங்கள் உள்ளிட்டவை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி பேட்டி

இந்நிலையில் கூட்டத்தொடரில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று காலை புதிய நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், நடப்பு கூட்டத்தொடரில் அனைத்து எம்.பிக்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஆக்கப்பூர்வ விவாதம்

நாட்டின் நலனிற்காக ஆக்கப்பூர்வமான விவாதத்தை முன்னெடுப்பர். நாட்டு மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு சிறப்பான முறையில் கூட்டத்தொடரை கொண்டு செல்வோம் என்று கூறினார்.

மணிப்பூர் சம்பவம்

மேலும் பேசுகையில், மணிப்பூரில் நடந்த நிகழ்வு பெரிதும் அதிர்ச்சி அளிக்கிறது. இது 140 கோடி இந்தியர்களையும் தலைகுனிய வைத்துள்ளது. இந்த தவறுக்காக அவர்கள் ஒருபோதும் மன்னிக்கப்பட மாட்டார்கள். அனைத்து மாநில முதலமைச்சர்களும் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்தி, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்துகிறேன்.

அவமானகரமான நிகழ்வு

சட்டம் தனது கடமையை முழுவீச்சில் செய்யும். மணிப்பூர் சம்பவம் நாகரிக சமூகத்திற்கு ஒரு அவமானகரமான விஷயமாக அமைந்திருக்கிறது. என்னுடைய மனம் வேதனையில் மற்றும் கோபத்தில் தவிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். தற்போது நாட்டையே கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது மணிப்பூர் சம்பவம்.

நீதி கிடைக்க கோரிக்கை

இதற்கு அரசியல் கட்சிகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த வீடியோவின் உண்மை தன்மை, எப்போது நடந்தது, பாதிக்கப்பட்ட நபர்கள் யார், குற்றவாளிகள் எங்கே உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க வேண்டியது அவசியம். மேலும் இந்த விவகாரத்தில் உரிய நீதி வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்ட களத்தில் குதிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் திட்டம்

இது நடப்பு மழைக்கால கூட்டத்தொடரை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சமீபத்தில் தான் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூடி பாஜகவிற்கு எதிராக மக்களவை தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

இதே பாஜக அரசு நடைபெறும் மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சம்பவத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் எவ்வாறு காய் நகர்த்த போகின்றனர் என்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.