சென்னை: Yogi Babu (யோகிபாபு) ஜவான் படத்தில் நடித்ததற்காக யோகிபாபு பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் யோகிபாபு. ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த அவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் கையில் ஏராளமான படங்கள் இருக்கின்றன. இதனால் படு பிஸியாக நடித்துவருகிறார் யோகிபாபு. டாப் ஹீரோக்கள் அத்தனை பேருடனும் இணைந்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
ஹீரோவான யோகிபாபு: நகைச்சுவை நடிகராக வலம் வந்த யோகிபாபு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படமே லேடி சூப்பர் ஸ்டாருடன் ஹீரோவாக நடித்த யோகிபாபுவுக்கு கோலமாவு கோகிலா படமானது வரவேற்பைப் பெற்றது. இதனால் ஹீரோவாகவே தொடரலாம் என்பதை அவர் செய்தார். அதேசமயம் நகைச்சுவை காட்சிகளிலும் அவர் நடித்துவருகிறார்.
மண்டேலா : ஹீரோவாக முதல் பட வெற்றிக்கு பிறகு மடோன் அஸ்வின் இயக்கத்தில் மண்டேலா படத்தில் கதாநாயகனாக நடித்தார் யோகிபாபு. வித்தியாசமான கதைக்களத்தைக்கொண்ட மண்டேலாவும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக தேசிய விருதையும் வென்றது. இதனால் யோகிபாபு உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்றார். மேலும் அவருக்கு சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதையும் ரசிகர்களுக்கு மண்டேலா உணர்த்தியது.
மாவீரன், ஜெயிலர்: யோகிபாபு நடிப்பில் சமீபத்தில் மாவீரன் படம் வெளியானது. படமும் மெகா ஹிட்டாகியிருக்கிறது. அதேபோல் ரொம்ப நாட்களுக்கு பிறகு யோகிபாபுவின் காமெடி ரொம்பவே ரசிக்கும்படி இருந்ததாக ரசிகர்கள் கூறினர். மாவீரன் மட்டுமின்றி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்திலும் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனால் அந்தப் படத்திலும் அவரது நடிப்பு பேசப்படும் என்ற நம்பிக்கை திரையுலகினரிடம் இருக்கிறது.

ஜவான்: தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் கமிட்டாகியிருக்கிறார் யோகிபாபு. அப்படி ஏற்கனவே சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் நடித்த யோகிபாபு மீண்டும் அவருடன் ஜவான் படத்தில் நடித்திருக்கிறார். படத்தை அட்லீ இயக்க விஜய் சேதுபதி, நயன்தாரா, ப்ரியாமணி, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படமானது செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் ஜவான் படத்துக்காக யோகிபாபு 40லிருந்து 45 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பட்டையை கிளப்பிய ட்ரெயல்ர்: முன்னதாக ஜவான் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. படம் பக்கா ஆக்ஷன் காட்சிகளோடு ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியிருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது. முக்கியமாக ஷாருக்கான் மட்டுமின்றி நயன்தாராவும் ஆக்ஷனில் மாஸ் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்துக்குள்ளேயே 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.