கேரள மாநில திரைப்பட விருது..மம்முட்டி சிறந்த நடிகர்.. நண்பகல் நேரத்து மயக்கம் சிறந்த படம்!

திருவனந்தபுரம்: நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருதை கேரள அரசு வழங்கி உள்ளது.

நடிகர் மம்மூட்டி நடிப்பில் மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியானத் திரைப்படம் நண்பகல் நேரத்து மயக்கம்.

தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழியில் வெளியான இத்திரைப்படமான நடிகை ரம்யா பாண்டியன், பூ ராமு ஆகியோர் நடித்திருந்தனர்.

நண்பகல் நேரத்து மயக்கம்: கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலாவுக்க வரும் மம்மூட்டி சுற்றுலா முடிந்து சொந்த ஊருக்கு திரும்பி செல்லும் போது பழனிக்கு அருகே ஒரு கிராமத்தில் திடீரென வேனை விட்டு இறங்கி ஒரு வீட்டிற்குள் சென்று விடுகிறார். முன்பின் தெரியாதவர்களின் வீட்டிற்கு சென்று தன்னை சுந்தரம் எனக் கூறிக் கொண்டு அங்கு வாழும் நபர்களை பெயர் சொல்லி அழைக்கிறார்.

இயல்பான நடிப்பு: இதனால், அந்த வீட்டில் இருப்பவர்கள் மற்றும் கிராமத்தினரும் என்ன நடக்கிறது என புரியாமல் குழம்புகின்றனர். மம்முட்டியின் திடீர் மாற்றத்தைப் பார்த்து அவரது மனைவியும், உறவினர்களும் திகைக்கின்றனர். நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் மம்முட்டி ஜேம்ஸ் என்ற கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தை திரையரங்கில் தவறவிட்ட ரசிகர்கள்,நெட்பிளிக்ஸில் பார்த்து ரசித்து மம்முட்டியின் நடிப்பை வெகுவாக பாராட்டினார்கள்.

சிறந்த நடிகர்:இந்நிலையில், கேரளா அரசின் 53வது திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில், சிறந்த நடிகருக்கான விருதை நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் மம்முட்டி பெற்றார். மம்முட்டி சிறந்த நடிகருக்கான மாநில அரசு விருதை வெல்வது இது எட்டாவது முறையாகும். சிறந்த திரைப்படத்திற்கான விருது நண்பகல் நேரத்து மயக்கம் படத்திற்கு கிடைத்தது.

சிறப்பு ஜூரி விருது: மேலும், ரேகா படத்தில் நடித்ததற்காக வின்சி அலோசியஸ் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். அரியிப்பு படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றார். நான் தான் கேஸ் கொடு படத்தில் நடித்ததற்காக குஞ்சாகோ போபன் மற்றும் அப்பன் படத்தில் நடித்த அலென்சியர் ஆகியோர் சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.