சத்திய சோதனை விமர்சனம்: சுவாரஸ்யமான கதைக்களம், ஆங்காங்கே காமெடி! ஆனால் படமாக க்ளிக் ஆகிறதா?

அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு கிராமத்தின் ஆள் நடமாட்டமில்லாத பனங்காட்டுப் பகுதியில், அதிக நகைகள் அணிந்த ஒரு நபர் மிடுக்காக வலம் வருகிறார். அவரை நான்கு பேர் கொண்ட கும்பல் ஓட ஓட வெட்டிக் கொலை செய்கிறார்கள்.

மறுநாள் காலை அவ்வழியே வரும் பிரதீப் (பிரேம்ஜி) பிணம் வெயிலில் கிடப்பதைப் பார்த்து அதை ஓரமாக நகர்த்தி வைக்கிறார். மேலும் கொலை செய்யப்பட்ட நபருக்கு சொந்தமான வாட்ச், ஒரு செயின் மற்றும் போனை எடுத்துக் கொண்டு சங்குப்பட்டி காவல் நிலையத்துக்குப் புகார் கொடுக்கச் செல்கிறார்.

பிரேம்ஜி

இதற்கிடையே கொலை நடந்து பிணம் இருந்த இடம் பக்கத்துக் காவல் நிலையத்தின் எல்லை என்றும், பிரேம்ஜி பிணத்தை நகர்த்தி வைத்திருக்கும் இடம் சங்குப்பட்டி காவல் நிலையத்தின் எல்லை என்றும் தெரிய வருகிறது. உண்மையான கொலையாளிகள் பக்கத்துக் காவல் நிலையத்தில் ஆஜர் ஆகிறார்கள். இதனிடையே பிணத்தின் கழுத்திலிருந்த மீதி நகைகள் எங்கே போனது என்ற கேள்விகளும் எழுகின்றன. உடனே காவல்துறையினரின் சந்தேகக் கண்கள் பிரேம்ஜியின் மீது திரும்புகின்றன. உண்மையில் நகைகள் எங்கே போனது, இரு காவல் நிலைய அதிகாரிகளும் இந்த வழக்கினை எப்படிக் கையாண்டார்கள் என்பதை நகைச்சுவை கலந்து சொல்ல முற்பட்டிருக்கிறது இந்த ‘சத்திய சோதனை’.

படிப்பறிவற்ற கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் பிரேம்ஜி. அவர் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்யாமல் பிரேம்ஜி ஆகவே அவர் நடித்திருப்பது கதையின் போக்கில் ஒட்டாமல் தனியாகத் தெரிகிறது. கடைநிலை காவல்துறை அதிகாரி குபேரனாக கே.ஜி.மோகன் நடித்துள்ளார்.

சத்திய சோதனை

தனது சக அதிகாரிகளுடன் சேர்ந்து அவர் செய்யும் அலப்பறைகள் ஆங்காங்கே சிரிப்பலைகளை உண்டாக்குகின்றன. ‘சுப்ரமணியபுரம்’ சித்தனாக அறியப்பட்டவருக்கு இது பெயர் சொல்லும் கதாபாத்திரம்.

நேர்மையான நீதிபதியாக வரும் கு. ஞானசம்பந்தன் குற்றம் புரிந்த அதிகாரிகளிடம் கோபம் காட்டுவது, ஏளனப் பார்வையுடன் பார்ப்பது என தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாகச் செய்துள்ளார். இருந்தும் அவரது ஆரம்ப காட்சிகளில் டப்பிங்கில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நாயகி ஸ்வாயம் சித்தாவுக்கு ஒரு பாடலில் பயன்படுத்தும் அளவுக்குக் கூட திரை நேரம் ஒதுக்கப்படவில்லை. அதே சமயம், லந்து செய்யும் பாட்டி, எடுபிடி வேலை செய்யும் இன்பார்மர் என மற்ற கதாபாத்திரங்கள் கவனம் பெறுகின்றன.

சத்திய சோதனை

செம்மண் பூமியின் பனங்காட்டு வெம்மையை ஒளிப்பதிவில் சிறப்பாகக் கடத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.வி சரண். படத்தொகுப்பில் ஆரம்ப காட்சிகளில் நிறையத் தொடர்ச்சியற்ற “ஜம்ப் கட்கள்” தெரிகின்றன. அது நாயகன் பிளாஷ் பேக்கில் இருக்கிறாரா, நிகழ்காலத்தில் இருக்கிறாரா என்ற குழப்பத்தினை உண்டாகிறது. படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன் இதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நகைச்சுவை வசனமாக அங்கங்கே வரும் ஒன் லைனர்கள் கவர்கின்றன. இருப்பினும் தனிச்சொத்து, பொதுச்சொத்து என்று வரும் அரசியல் வசனத்தின் தேவை கதைக்கு இருக்கிறதா என்பது கேள்விக்குறியே. அப்படிக் கதைக்குச் சம்பந்தம் உண்டென்றால் அதைக் காட்சிகள் வழி கடத்தத் தவறி இருக்கிறார் இயக்குநர் சுரேஷ் சங்கையா. இசையமைப்பாளர் ரகுராமின் ஐயப்ப சாமி பாடலும், கங்கை அமரன் குரலில் வரும் மற்றொரு பாடலும் ஈர்க்கின்றன. தீபன் சக்கரவர்த்தி பின்னணி இசையை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம். ஓட்டை வண்டி நிற்கும் காவல் நிலையம், சிறிய ஊருக்குள் இருக்கும் நீதிமன்றம், பாட்டியின் வீடு எனக் கலை இயக்கத்தில் கிடைத்த வாய்ப்புகளில் டீசன்டாக ஸ்கோர் செய்துள்ளார் கலை இயக்குநர் வாசுதேவன்.

சத்திய சோதனை

எடுத்த எடுப்பிலேயே ஒரு கொலை, நகைத் திருட்டு என சுவாரஸ்யமாக ஆரம்பிக்கிறது கதைக்களம். இருப்பினும் கதையின் நாயகன் பாத்திரம் பார்வையாளர்களுக்கு அந்நியமாக இருப்பதால் வந்த சுவாரஸ்யம் விலகிச் செல்ல ஆரம்பிக்கிறது. இருந்தும் துணை நடிகர்களின் துணையால் காட்சிகளை நகர்த்தி இருக்கிறார்கள். இது கதையை நாயகன் பார்வையில் பின் தொடர்வதா, துணை நடிகர்கள் பார்வையில் பின் தொடர்வதா என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

கிராமங்களில் இருக்கும் காவல் நிலைய கட்டமைப்பு, யதார்த்தமான நீதிமன்ற காட்சியமைப்பு, காவல் நிலைய எல்லை பிரச்னை என உண்மைக்கு நெருக்கமான விஷயங்களைக் காட்சிப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாகக் கொலை எப்படி நடந்தது எனக் கொலையாளிகளை வைத்து காவலர்கள் ஜோடிக்கும் காட்சி, நீதிமன்ற விசாரணைக் காட்சிகள் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன.

சத்திய சோதனை

கொலை செய்தவர்களே நகையை எடுத்திருப்பார்கள் என்ற சந்தேக கோணத்தில் விசாரணை நடத்தப்படாமல் இருப்பது, குற்றவாளிகள் தப்பித்துப் போகாமல் இருப்பதற்கான எந்த முன்னெச்சரிக்கையும் செய்யாமல் இருப்பது என நிறைய லாஜிக் மீறல்களும் எட்டிப் பார்க்கின்றன. படத்தில் வரும் ராட்வில்லர் நாய் காட்சி, ஒருவர் நாய்க் கடி வாங்கி ஆட்டோவில் ஏறும் காட்சி என சில காட்சிகள் ‘சந்திரமுகி’ படத்தில் வரும் விளக்கின் மேல் இருக்கும் பாம்பை ஞாபகப்படுத்துகின்றன. இவற்றை எல்லாம் தாண்டி, க்ளைமாக்ஸ் காட்சி படத்தின் கரு என்ன சொல்ல வருகிறது என்பதைத் தெளிவாகச் சொல்லாமலே முடிந்து விடுகிறது.

ஒட்டுமொத்தமாக நல்ல கதைக்கருவை எடுத்த இயக்குநர், அதற்கேற்ப சிறப்பான கதாநாயக வடிவமைப்பு, திரைக்கதையில் விறுவிறுப்பு போன்றவை இல்லாமல் தத்தளித்துள்ளார். தனித் தனி காட்சிகளாக ஆங்காங்கே சிரிப்பலைகளை உருவாக்கி இருந்தாலும் ஒட்டுமொத்த படமாக முழுமையடையாத நிலைதான் மிஞ்சுகிறது.

சத்திய சோதனை

‘சத்திய சோதனை’ கொஞ்சம் சிரிக்க வைத்தாலும் ஒருவித சோதனையாகவே ஓடி முடிகிறது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.