திருநெல்வேலி: சென்னையில் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை திருநெல்வேலி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, பத்திரப் பதிவை மண்டல பதிவுத் துறை துணை தலைவர் ரத்து செய்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த குலாப் தாஸ் நாராயணன் என்பவருக்கு சொந்தமான 1 ஏக்கர் 30 சென்ட் இடம் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் ஆற்காடு சாலையில் உள்ளது. கடந்த 1944-ம் ஆண்டில் குலாப் தாஸ் நாராயணன் இறந்துவிட்டார் என இறப்பு சான்றிதழ் வைத்துக்கொண்டு, உறவினர்களில் ஒரு சிலர் அந்த சொத்துக்கு சொந்தம் கொண்டாடினர். மற்றொரு புறம் அவர் 1946-ல் இறந்துவிட்டதாக ஓர் இறப்பு சான்றிதழை வைத்துக் கொண்டு உறவினர்களில் வேறு சிலர் தாங்கள்தான் சொத்துக்கு சொந்தக்காரர்கள் என்று கூறி வந்தனர். கடந்த 2006-ல் அந்த சொத்தை சரஸ்வதி என்பவர் பத்திரப் பதிவு செய்துள்ளதாகவும் தகவல் உள்ளது.
இந்த சூழலில், அந்த நிலத்துக்கு தன்னிடம் பவர் உள்ளதாக கூறி, மதுரையை சேர்ந்த இளையராஜா என்பவர், திருநெல்வேலி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜியிடம் ரூ.45 கோடிக்கு இடத்தை விலைபேசி, அதில் முதல்கட்டமாக ரூ.2.50 கோடியை முன்பணமாக வாங்கியுள்ளதாக தெரிகிறது.
‘பத்திரப் பதிவு துறை, வருவாய் துறை அலுவலர்கள் உதவியுடன், சென்னை ஆற்காடு சாலையில் உள்ள ரூ.100 கோடி சொத்தை, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நயினார் பாலாஜி பத்திரப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்’ என்று அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு சில மாதங்களுக்கு முன்பு குற்றம் சாட்டியது. அதற்கான ஆதாரங்களை புகாராக தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பியது.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட திருநெல்வேலி பதிவுத் துறை துணை தலைவர், ‘‘இந்த பதிவு ரத்து செய்யப்படுவதற்கு முகாந்திரம் உள்ள ஆவணம்’’ என்று தெரிவித்திருந்தார். ‘இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று, பத்திரப் பதிவு துறை அமைச்சரும் தெரிவித்தார்.
இந்நிலையில், ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் போலி ஆவணங்களால் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதை திருநெல்வேலி மண்டல பதிவுத் துறை துணை தலைவர் தற்போது ரத்து செய்துள்ளார்.
வில்லங்க சான்றில் பதிவேற்றம்: ரூ.100 கோடி சொத்துக்கான பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்டிருப்பது வில்லங்க சான்றிதழில் ஆவணமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ‘ரத்து செய்யப்படுவதற்கு முகாந்திரம் உள்ள ஆவணம்’ என்று திருநெல்வேலி மண்டல பதிவுத் துறை துணைத் தலைவரின் ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்சென்னை மாவட்ட பதிவாளரின் (நிர்வாகம்) ஆணையில்,‘இது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 463 மற்றும் 470-ன்படி போலிஆவணம் (Forged Document) ஆகும். இது இந்திய பதிவு சட்டம் பிரிவு 22-பி (1)-ன்படி மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த ஆவணத்தை ரத்துசெய்து ஆணையிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் முறையிடப் போவதாகவும் நயினார் பாலாஜி தெரிவித்துள்ளார். இவர் பாஜக மாநில இளைஞர் அணி துணை தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.