மருத்துவர்கள் அறையில் செந்தில் பாலாஜி.. சீருடையின்றி சந்தித்த டிஐஜி.. சவுக்கு சங்கர் பரபரப்பு தகவல்

சென்னை:
பண மோசடி வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவர்கள் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறைத்துறை டிஐஜியும், கண்காணிப்பாளரும் சீருடையின்றி அவரை சந்தித்து பேசி அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்ததாகவும் சமூக ஆர்வலரும், பிரபல யூடியூபருமான சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜியின் மனைவி சாமி தரிசனம் !

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்தறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ததால் சிறையில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். விரைவில் அவர் சிறை அறைக்கு கொண்டு செல்லப்படுவார் எனக் கூறப்படுகிறது. சிறையில் செந்தில் பாலாஜிக்கு முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், செந்தில் பாலாஜியை சிறைத்துறை டிஐஜி முருகேசன் அடிக்கடி சந்தித்து பேசி வருவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு கைதியை சிறைத்துறை டிஐஜி சந்தித்து பேச வேண்டிய அவசியம் என்ன? என்றும், அமைச்சராக இல்லாத ஒரு சாதாரண சிறைக் கைதியை சிறைத்துறை டிஐஜி இப்படி சந்திப்பாரா? என அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின. இதனைத் தொடர்ந்து, சிறைத்துறை சார்பில் இன்று ஒரு விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில், “கைதிகளை டிஐஜி, ஜெயிலர் சந்திப்பதும், சோதனையிடுவதும் வழக்கமானது தான். அந்த வகையில்தான், சிறைத்துறை டிஐஜி செந்தில் பாலாஜியை சந்தித்து பேசினார். அதுவும் ஒருமுறை மட்டும்தான் செந்தில் பாலாஜியை டிஐஜி சந்தித்தார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், யூடியூபர் சவுக்கு சங்கர் இந்த விவகாரம் தொடர்பாக இன்று மதியம் ஒரு ட்வீட்டை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இன்னும் சிறையில் மருத்துவர்கள் அறையில் தான் அண்ணன் செந்தில் பாலாஜி தங்க வைக்கப்பட்டுள்ளார். பிரகாஷ், மோகன் என்ற இரண்டு ரேஷன் ஸ்டோர் காவலர்கள் சிறப்பாக தயாரித்த உணவை விநியோகம் செய்தனர். இன்றும் டிஐஜி முருகேசன், கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் சீருடையின்றி காலை 7.30 மணிக்கு மருத்துவமனை சென்று கைதி செந்தில் பாலாஜியை சந்தித்து பேசி அவருக்கு தேவையானவைகளை செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.