தமிழ்நாடு உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரின் மகன் கெளதம சிகாமணிக்கு தொடர்புடைய 7 இடங்களில் பல மணிநேரம் சோதனை மேற்கொண்டதோடு, இருவரையும் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அலுவலகத்தில் துருவி துருவி விசாரணை செய்திருக்கிறது அமலாக்கத்துறை. அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே தமிழ்நாடு அரசியலின் ஹாட் டாப்பிக்.

ரெய்டும் பின்னணியும்…
இதுகுறித்து நம்மிடம் பேசிய விவரமறிந்த சிலர், “2006 – 2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில், கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி விழுப்புரம் மாவட்டம், பூந்துறையிலுள்ள செம்மண் குவாரியை முறைகேடாகத் தன் மகன் கெளதம சிகாமணிக்கு வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், அந்தப் புகார் குறித்துத் தீவிரமாக விசாரிக்க உத்தரவிட்டார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. செம்மண் குவாரியில் அரசு அனுமதித்த அளவைவிட, பல மடங்கு மண் வெட்டி எடுக்கப்பட்டதைக் கண்டுபிடித்தது போலீஸ். 2,64,644 லோடு செம்மண் வெட்டியெடுக்கப்பட்டதாக, வானூர் தாசில்தார் குமாரபாலன் அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் 2012-ல் வழக்கு பதிந்தனர்.
அந்தச் செம்மண் வழக்கில் பொன்முடி, கெளதம சிகாமணி, பொன்முடியின் மைத்துனர் ராஜமகேந்திரன், ஜெயச்சந்திரன், புதுச்சேரியைச் சேர்ந்த சதானந்தம் உள்ளிட்ட ஏழு பேர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. செம்மண் வெட்டி எடுக்கப்பட்டதில், அரசுக்கு 28 கோடியே 37 லட்சத்து 65 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அவர்கள்மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன.

பொன்முடி கைதுசெய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் அவர் வெளியே வந்தாலும், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், அந்த வழக்கின் விசாரணை தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. இப்படியே 2012-லிருந்து 2021 வரை இழுத்துக்கொண்டே போனது வழக்கு விசாரணை.

2021-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, செம்மண் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் பொன்முடி. அதைச் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், முறையீட்டைத் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து, 2022-ல் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி, வழக்கின் விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரி, புதிய மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அந்த மனுவையும் கடந்த ஜூன் மாதம் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். இதைத் தொடர்ந்துதான், அந்தச் செம்மண் வழக்கு அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்துக்குள் போனது. வழக்கில், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறி பொன்முடி தொடர்புடைய ஏழு இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தியிருக்கிறது அமலாக்கத்துறை.” என்கிறார்கள்.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், முடக்கப்பட்ட பணம்
அமலாக்கத்துறை, ஜூலை 17 -ம் தேதி நடத்திய ரெய்டில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் 70 லட்சம் பணமும் 10 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணமும் கைப்பற்றப்பட்டதாக தகவல் பரவின. பணம் பறிமுதல் செய்யபட்டதாக சொல்லப்படும் தகவல் முற்றிலும் தவறானது என தி.மு.க வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆனால் ஜூலை 18-ம் தேதி அமலாக்கத்துறையின் அதிகாராப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் குற்றவியல் ஆவணங்களும், கணக்கில் வராத 81.7 லட்சம் ரூபாயும், வெளிநாட்டு பணம், இந்திய மதிப்பில் 13 லட்சம் ரூபாயும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் வங்கி கணக்கில் உள்ள 41.9 கோடி ரூபாய் முடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்மிடம் பேசிய வழக்கறிஞர்கள் சிலர், “அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை செய்தபோது சந்தேகத்தின் அடிப்படையில் பணம் உள்ளிட்ட ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைபற்றியிருப்பதாக தெரிகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி அளித்த வாக்குமூலம் ஆகியவற்றை வைத்து விசாரணையை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியதாக தெரிகிறது.
During the searches, various incriminating documents, cash amounting to Rs. 81.7 lakh, foreign currency (British pounds) equivalent to approx. Rs. 13 lakhs was seized and Fixed Deposits of Rs.41.9 Crore have been freezed.
— ED (@dir_ed) July 18, 2023
விசாரணையில் குற்றம் நடத்திருப்பதற்கான முகாந்திரம் இருந்தால் பணமோசடி தடுப்புச் சட்டம் Section 44 (B)-யின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய வாய்ப்பிருக்கிறது. இந்த பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கலாம்” என்றவர்.. ”பண மோசடி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடையாது” என்பதையும் குறிப்பிட்டார்.
வழக்கறிஞர் பாபு முருகவேலிடம் பேசினோம், “அமலாக்கத்துறையை பொறுத்தவரை ஏதோவொரு ஆதாரங்கள் இருப்பதால்தான் சோதனையே மேற்கொள்கிறார்கள். அமைச்சரின் மகன் கெளதம சிகாமணி முறைகேடாக கிடைக்கப்பெற்ற பணத்தைக் கொண்டு இந்தோனேஷியா, துபாய் மற்றும் மொரிஷியஸ் போன்ற நாடுகளில் முதலீடு செய்திருப்பதாக தகவல் இருக்கிறது.

இவையெல்லாம் உண்மையென வரும்போது சார்ஜ்சீட் போடப்பட்டு எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றங்களில் வழக்காக விசாரணைக்குவரும், ஆவணங்கள் அடிப்படையிலான வழக்கு என்பதால் நாட்களை தள்ளிப்போடலாமே தவிர தப்பிப்பதற்கு துளியும் வாய்ப்பில்லை. ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டுமா.. இல்லையா.. என்பதை அமலாக்கத்துறையின் விசாரணை அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.