வட தமிழகத்தையே விழுங்குவது போல சூழ்ந்த மழை மேகங்கள்.. இன்று இரவு செம்ம கச்சேரி.. வெதர்மேன் ரிப்போர்ட்

சென்னை: வட தமிழகத்தையே மழை மேகங்கள் சூழ்ந்து வருவதாகவும் இதன் காரணமாக சென்னை, வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு பலத்த மழை வெளுத்து வாங்கப் போவதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்த நிலையில், பருவமழை தீவிரமாகியுள்ளது. கேரளாவை புரட்டி போட்டுள்ள தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வீரியம் அடைந்து வருகிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை என பல பகுதிகளில் பரவலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை கடந்த மாதம் பேய் மழை பெய்தது.

இந்த சூழலில், வட தமிழக பகுதிகளில் தற்போது பெரிய அளவிலான ராட்சத மழை மேகங்கள் சூழ்ந்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இந்த மழை மேகங்கள் மிக வேகமாக வட தமிழகத்தை சூழ்ந்து வருகிறது. இதன் காரணமாகவே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது.

அதேபோல, இன்று இரவு காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று இரவு முழுவதும் போதும் போதும் என சொல்லும் அளவுக்கு மழை கொட்டித் தீர்க்கும் என்றும் அவர் கூறியுள்ளார். சென்னையில் தொடர்ந்து மழை பெய்தாலும், அதன் வேகம் மிதமாக இருப்பதால் தண்ணீர் தேங்கும் பிரச்சினை ஏற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.