சென்னை: தமிழில் இந்த வாரம் அநீதி, கொலை, சத்திய சோதனை உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல், ஹாலிவுட்டில் ஓபன்ஹெய்மர், பார்பி ஆகிய திரைப்படங்களும் ரிலீஸாகியுள்ளன.
இதனிடையே கடந்த வாரம் வெளியான மாவீரன், மிஷன் இம்பாசிபிள் படங்களும் திரையரங்குகளில் தொடர்ந்து மாஸ் காட்டி வருகின்றன.
இந்நிலையில், இந்த வாரம் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வாரம் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: வசந்தபாலன் இயக்கியுள்ள அநீதி திரைப்படம் நேற்று வெளியானது. அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதன்படி அநீதி முதல் நாளில் 60 முதல் 80 லட்சம் ரூபாய் வரை மட்டுமே வசூலித்துள்ளதாம்.
அதேபோல், விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படமும் நேற்று வெளியானது. இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பாலாஜி கே குமார் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனியின் படம் என்பதால் நல்ல ஓபனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொலை முதல் நாளில் 50 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாம். அதேநேரம் இந்தப் படம் இணையத்திலும் லீக் ஆகி அதிர்ச்சிக் கொடுத்திருந்தது.
பிரேம்ஜி நடித்துள்ள சத்திய சோதனை திரைப்படமும் இந்த வாரம் வெளியானது. ‘ஒரு கிடாயின் கருணை மனு’ மூலம் கவனம் ஈர்த்த சுரேஷ் சங்கையா, சத்திய சோதனை படத்தை இயக்கியுள்ளார். விமர்சன ரீதியாக சத்திய சோதனை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் 15 முதல் வரை 20 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கடந்த வாரம் வெளியான சிவகார்த்திகேயனின் மாவீரன், இந்த வாரமும் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டி வருகிறது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான மாவீரன், ஏற்கனவே 50 கோடி ரூபாய் வசூலை கடந்துவிட்டது. இந்த வாரம் அநீதி, கொலை ஆகிய படங்கள் வெளியான போதும், மாவீரனுக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதாம். அதன்படி, இந்தப் படம் நேற்று மட்டும் 1.5 முதல் 2 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம்.
ஒட்டுமொத்தமாக இந்த வாரம் தமிழ்ப் படங்களின் கலெக்ஷன் சுமாராகவே உள்ளது. ஆனால், ஹாலிவுட்டில் வெளியான ஓபன்ஹெய்மர், பார்பி படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ருத்ரதாண்டவம் ஆடி வருகின்றன. உலகளவில் மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டிலும் இந்தப் படங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. ஓபன்ஹெய்மர், பார்பி படங்கள் நேற்று ஒரேநாளில் மட்டும் தமிழ்நாட்டில் 3 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.