2.5 டன் தக்காளி; சினிமா பாணியில் டெம்போவுடன் ஹை-ஜாக் செய்த `வேலூர்' தம்பதி! – பெங்களூரு `பகீர்'

இந்தியா முழுவதும் காய்கறிகளின் விலை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், ஹரியூரைச் சேர்ந்த விவசாயி மல்லேஷ், தனது நிலத்தில் விளைந்த 2 டன் தக்காளியை ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, கோலார் தக்காளி மார்க்கெட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சரக்கு வாகனத்தை திடீரென வழிமறித்து கார் ஒன்று நின்றது.

தக்காளி

அதிலிருந்து மூன்று பேர் இறங்கி, சரக்கு வாகனம் தங்களின் காரை உரசிவிட்டுச் சென்றதாகத் தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கார் சேதமடைந்ததற்காக சரக்கு வாகனத்திலிருந்த இருவரிடம் ரூ.10,000 ஆன்லைன் மூலம் பறித்துக்கொண்டனர். மேலும், வாகனத்தில் தக்காளி இருப்பதை அறிந்த மூன்று பேரும், காரை சரிசெய்ய அதிக செலவாகும் என சரக்கு வாகனத்தில் இருந்தவர்களைத் தாக்கிவிட்டு, அவர்களுடனே இருவர் சரக்கு வாகனத்திலும், ஒருவர் காரிலும் சென்றிருக்கின்றனர்.

சரக்கு வாகனம் சிக்கஜாலா அருகே சென்றபோது, பாதிவழியில் தக்காளி விவசாயியையும், சரக்கு வாகன ஓட்டுநரையும் இறக்கிவிட்டு, வேகமாக தக்காளியை வாகனத்துடன் கடத்திச் சென்றிருக்கிறார்கள். கடத்தப்பட்ட தக்காளியின் மதிப்பு 2.50 லட்சம் ரூபாய் எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த ஆர்.எம்.சி யார்டு காவல்துறை, வாகனத்தின் இயக்கத்தைக் கண்காணித்து, அந்தக் கொள்ளை கும்பலைச் சேர்ந்த தம்பதியைக் கைதுசெய்திருக்கிறது.

காவல்துறை

இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய காவல்துறை, “ஐந்து பேர்கொண்ட கும்பல், சுமார் 2 டன் தக்காளியை கடத்திச் சென்றிருக்கிறது. அவர்கள் தக்காளி வாகனத்தின் நம்பர் பிளேட்டை மாற்றிவிட்டு வாணியம்பாடிக்குச் சென்றிருக்கிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக வேலூரைச் சேர்ந்த பாஸ்கர் (28), அவரின் மனைவி சிந்துஜா (26) ஆகிய இருவரை சனிக்கிழமை கைதுசெய்திருக்கிறோம். மேலும் அவர்களிடமிருந்து ரூ.1.6 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் தலைமறைவாக இருக்கும் மூன்று பேரைத் தேடி வருகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.