சென்னை: கிரிக்கெட் உலகின் தல தோனியாக வலம் வரும் எம்.எஸ். தோனி தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த நிலையில், முதல் படமாக எல்ஜிஎம் படத்தை தயாரித்துள்ளார். ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அடுத்த வாரம் படம் திரையில் வெளியாகிறது.
இந்நிலையில், சமீபத்தில், எல்ஜிஎம் படக்குழுவினர் ஒன் இந்தியா தமிழ், பிலிமி பீட்டுக்கு அளித்த பேட்டியில் இந்த படத்தில் தோனி நடித்திருக்கிறாரா? என்கிற கேள்வி எழுப்பப்பட்டது.
அந்த கேள்விக்கு Let’s Get Married படத்தின் நாயகன் ஹரீஷ் கல்யாண் சொன்ன சூப்பரான விஷயம் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் வரும் ஜூலை 28ம் தேதி திரையில் இருக்கும் என எதிர்பார்க்க வைத்துள்ளது.
தோனி படம் வருது: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் தலைவனாகவே கொண்டாடி வரும் தல தோனியின் படம் வரும் ஜூலை 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது. லவ் டுடே படத்தில் நடித்த இவானா ஹீரோயினாக நடிக்க ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். ஹரிஷ் கல்யாணின் அம்மாவாக நதியா நடித்துள்ளார். ஆர்.ஜே. விஜய், சாண்டி மாஸ்டர், விடிவி கணேஷ், வினோதினி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இசையமைத்து இயக்கி உள்ளார்.
கிரிக்கெட் வீரராக கலக்கிய தோனி தனது மனைவியை தயாரிப்பாளராக மாற்றி அழகு பார்த்துள்ளார். சாக்ஷி தோனி தயாரிப்பில் தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் உருவாகி உள்ள முதல் படமே தமிழ் படம் எனும் நிலையில், அடுத்த வாரம் அந்த படம் தியேட்டர்களில் வெளியாகிறது.
மாமியார் – மருமகள் பிரச்சனை: யூனிவர்ஸல் பிரச்சனையான மாமியார் மற்றும் மனைவிக்கு நடுவே ஹீரோ ஹரிஷ் கல்யாண் எப்படி சிக்கித் தவிக்கப் போகிறார் என்பதை காமெடி கலந்த ஃபன் என்டர்டெயின்மென்ட் டிராவல் மூவியாக ரமேஷ் தமிழ்மணி உருவாக்கி உள்ளார். சமீபத்தில், நடந்த இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்காக தோனி சென்னை வந்திருந்தார்.
தோனி கேமியோ இருக்கா?: கிரிக்கெட்டை தாண்டி விளம்பரப் படங்களில் நடித்துள்ள தோனி முதல்முறையாக பல கோடி போட்டுத் தயாரித்துள்ள தனது சொந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இதுபற்றி ஹீரோ ஹரிஷ் கல்யாணிடமே கேள்வி எழுப்ப, அந்த சர்ப்ரைஸை சொல்லி விடக் கூடாது என்பதற்காக, ஜூலை 28ம் தேதி தியேட்டரில் வந்து பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். தோனி கேமியோ ரோலில் நடித்திருந்தால், நிச்சயம் அவரது படத்துக்கு அது பெரிய ப்ரமோஷனாகவே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதை எல்லாம் அவர் பெரிதாக விரும்ப மாட்டார் என்றும் படம் தன்னால் ஓடாமல், கதைக்காக ஓடினால் போதும் என்றே நினைப்பவர் என்றும் அவரது ரசிகர்களே இந்த படத்தில் கேமியோ என்பது கஷ்டம் தான் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.