மணிப்பூரில் இரண்டு சமூக குழுக்கள் இடையே நடந்து வரும் மோதலில் 2 பெண்கள் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பல பெண்கள் தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்தக் கொடூரச் சம்பவங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால், ஜூலை 23 -ம் தேதி மணிப்பூருக்குச் சென்று, வரும் 30-ம் தேதி வரை அங்கேயே தங்கி, பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருந்தார். ஆனால், தற்போது நிலைமை பதற்றமாக இருப்பதால் அவரின் வருகைக்கு மணிப்பூர் மாநில அரசு அனுமதி மறுத்தது. இருந்தாலும் திட்டமிட்டபடி மணிப்பூர் மாநிலம் இம்பாலுக்கு ஸ்வாதி மாலிவால் சென்றடைந்தார். தொடர்ந்து, அவர் பாதிக்கப்பட்ட குக்கி இனத்தை சேர்ந்த பழங்குடியினப் பெண்களையும் சந்திக்க உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நான் மணிப்பூருக்கு செல்வதாக இருந்த நிலையில் அம்மாநில அரசு திடீரென்று எனக்கு அனுமதி மறுத்துள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துப் பேச நான் ஏற்கனவே எனது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டேன். ஏன் என்னை நிறுத்த முயற்சிக்கிறார்கள்?” என கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து திட்டமிட்டப்படி மணிப்பூர் செல்வதற்கு முன், “நான் மணிப்பூருக்குச் செல்ல முடிவு செய்துள்ளேன், என்னைத் தடுக்காமல், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களைச் சந்திக்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்யுமாறு நான் மாநில அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்” என தெரிவித்தார்.

அதன்படி அவர் நேற்று (ஜூலை 23) டெல்லியில் இருந்து மணிப்பூர் புறப்பட்டு சென்றார். மணிப்பூருக்கு சென்ற பின், “முதல்வர் பிரேன் சிங் அவர்களிடம் நேரம் கேட்டுள்ளேன். எனது கோரிக்கையை அவர் விரைவில் ஏற்று கொள்வார் என்று நம்புகிறேன். நான் நேரடியாக முதல்வர் அலுவலகத்திற்குச் செல்கிறேன். அங்கு அவரை சந்திக்க விரும்புகிறேன். பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளனவர்களை சந்தித்து அவர்களுக்கு சட்ட உதவி, ஆலோசனை அல்லது ஏதேனும் இழப்பீடு கிடைத்துள்ளதா என்று பார்க்க விரும்புகிறேன். மாநில மக்களுக்கு உதவுவதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன், என்று மணிப்பூர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன். தயவுசெய்து அதைச் செய்ய என்னை அனுமதிக்கவும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜூலை 20-ல் ஸ்வாதி மலிவால் கடிதம் எழுதியிருந்தார்.
மணிப்பூரில் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக அரங்கேறிவரும் வன்முறை சம்பவங்களை கருத்தில் கொண்டு பாதுகாப்பு காரணங்களால் பலருக்கு அங்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் சென்ற போதும் தடுத்து நிறுத்தப்பட்டார். நிலைமை இவ்வாறு இருக்க, மணிப்பூரின் பதட்டங்களையெல்லாம் கடந்து அங்கு சென்று உண்மையை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டுவேன் என்கிறார் ஸ்வாதி மலிவால்.

யார் இந்த ஸ்வாதி மலிவால்:
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஊழலுக்கு எதிரான இந்திய இயக்கத்தின் முக்கிய உறுப்பினராக மாலிவால் இருந்தார். 2015-ல் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அமைந்த பிறகு, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக மாலிவால் நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.
அதில் குறிப்பாக, பாலியல் வன்கொடுமை வழக்குகளை ஆறு மாதங்களில் விசாரித்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ‘திசா’ மசோதாவை உடனடியாக இந்தியா முழுவதும் அமல்படுத்தவேண்டும் எனக் கூறி 13 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். அந்த நேரத்தில் அவரது உடல் எடை 8 கிலோ வரை குறைந்தது. மருத்துவர்கள் அவரை பரிசோதித்து உடனடியாக உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி கோரிக்கை விடுத்தனர். ஆனால் மலிவால் அதை ஏற்க மறுத்தார்.

‘பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் ஆறு மாதத்துக்குள்ளாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அவர்களின் அலறல் நம்மை சும்மா இருக்கவிடாது. அவர்கள் அனுபவித்திருக்கும் சித்ரவதைகளை நினைக்கும்போது நமக்கும் நடுக்கம் வருகிறது. எனவே, இதுமாதிரியான குற்றங்களுக்குக் கடுமையான சட்டங்கள் நிறைவேற்றுவது மட்டும்தீர்வு இல்லை. அதை எவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றுகிறோம் என்பதுதான் முக்கியம்’ என்பதை தொடர்ந்து வலியுறுத்து வருகிறார் ஸ்வாதி மலிவால்.