நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம்… தமிழ்நாடு அரசு நிலைப்பாடும், தலைமை நீதிபதி உத்தரவும்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நீதிமன்றங்களை சுற்றி சர்ச்சை வலம் வந்தது. அதாவது, நீதிமன்றங்களில் காந்தி, திருவள்ளுவர் ஆகிய இருவரின் புகைப்படங்களை மட்டுமே வைக்க வேண்டும். வேறு யாருடைய புகைப்படத்தையும் வைக்க வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தியதாக தகவல்கள் பரவின.

நீதிமன்றங்களுக்கு சுற்றறிக்கை

இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் அவர்கள் அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியதாக கூறப்பட்டது. மேலும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் அம்பேத்கரின் உருவப்படத்தை அகற்றவும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படங்களை வைக்கக் கோரிய வழக்கறிஞர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கவும் செய்யப்பட்டன.

வழக்கறிஞர் சங்கங்கள் எதிர்ப்பு

இதற்கு வழக்கறிஞர் சங்கங்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்தன. இந்திய அரசியலப்பு சட்டத்தை இயற்றிய அம்பேதருக்கே நீதிமன்றத்தில் இடமில்லையா? அப்படியெனில் சனாதனம் இங்கேயும் புகுத்தப்படுகிறதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கிடையில் மாநிலத்தின் பல்வேறு நீதிமன்றங்கள் முன்பாக போராட்டங்களும் வெடித்தன.

செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் 132 வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட முதன்மை நீதிபதி மாவிஸ் தீபிக சுந்தரவதனா அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து கூடுதல் மாவட்ட நீதிபதி உள்பட அனைத்து நீதிபதிகளும் மரியாதை செலுத்தினர். மேலும் இந்நிகழ்வில் செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஶ்ரீபன் ஶ்ரீகுமார், செயலாளர் மகேஷ்குமார், பொருளாளர் பிரேம்குமார் மற்றும் சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள்,இளம் வழக்கறிஞர்கள் என அனைவரும் அம்பேத்கர் திருவருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி அவரை வணங்கினர்.அதனை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது

தமிழக அரசு நிலைப்பாடு

இந்நிலையில் தமிழக அரசு முக்கியமான செய்திக் குறிப்பு ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. அதில், நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்தி பரவியதை அடுத்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி,

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் சந்திப்பு

மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் மாண்பமை மெட்ராஸ் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதியரசர் சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா அவர்களை சந்தித்து இந்த விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை

தலைமை நீதிபதி அவர்களிடம் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக் கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் அவர்கள் கடிதம் வழங்கி நேரில் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை கேட்டறிந்த தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா, நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை.

அம்பேத்கர் சர்ச்சைக்கு குட்பை

தற்போது உள்ள நடைமுறையே தொடரும் (Status Quo to be continued) என்று தெரிவித்தார். இந்த தகவல் வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்பேத்கர் புகைப்படம் தொடர்பான சர்ச்சை ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.