அந்தமான்: பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து வைத்த அந்தமான் புதிய விமான நிலையத்தின் மேற்கூரை கீழே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக அங்குள்ள போர்ட் பிளேயர் விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டு, சமீபத்தில் திறக்கப்பட்டது.
விபத்து: இதனைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு , பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். இதற்கிடையே விரிவுபடுத்தப்பட்ட அந்தமான் விமான நிலையத்தில், பலத்த காற்றின் காரணமாக அங்கே இருந்த கூரையின் ஒரு பகுதி கீழே விழுந்துள்ளது. டெர்மினல் கட்டிடத்திற்கு வெளியே, டிக்கெட் கவுன்டரின் முன் இருந்த பால்ஸ் சீலிங் தான் கீழே விழுந்துள்ளது.
இந்த புது ஏர்போர்ட் டெர்மினலை தான் பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து வைத்திருந்தார். பிரதமர் திறந்து வைத்து சில நாட்களிலேயே டெர்மினல் மேற்கூரை இடித்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், கட்டுமானத்தில் பெரிதாகப் பாதிப்பும் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எப்படி நடந்தது: மேலும், கட்டித்தின் கட்டுமானத்தில் எந்தவொரு பிரச்சினையும் இல்லையாம். இந்த டெர்மினலை பிரதமர் மோடி திறந்து வைத்திருந்தாலும், இன்னும் இது பயன்பாட்டிற்கு வரவில்லை. இறுதிக்கட்ட பணிகள் அங்கு நடந்து வந்தது. அதன் ஒரு பகுதியாக சிசிடிவி கேமராக்களை பொறுதி வந்துள்ளனர்.
இதற்காக அந்த பகுதியில் பால்ஸ் சீலிங்கை தளர்வாக்கியுள்ளனர். சரியாக அந்த நேரத்தில் அதீத காற்று அடிக்கவே இந்த பால்ஸ் சீலிங் கீழே விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் மேலும் கூறுகையில், “இது ஒரு சிறிய விபத்து தான்.. சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வந்தது.
இந்த சிசிடிவி கேமராக்களுக்கான வயரிங் ஃபால்ஸ் பேனலுக்கு பின்னால் செய்யப்பட வேண்டும். இதற்காக அதைத் தளர்வாக்கி வைத்திருந்த போது தான் இப்படி நடந்துவிட்டது” என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டதாகவும் உடனடியாக அது சரி செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் விளக்கம்: இந்த விபத்து குறித்து அந்தமான் ஏர்போர்ட் அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள், “ஜூலை 22ஆம் தேதி இரவு பலத்த காற்று வீசியது.. அப்போது டிக்கெட் கவுண்டர் அருகில் இருந்த ஃபால்ஸ் சீலிங் எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்துவிட்டது.. இதனால் சுமார் 10 சதுர மீட்டர் அளவில் ஃபால்ஸ் சீலிங் கீழே விழுந்துவிட்டது. இருப்பினும், அது உடனடியாக சரி செய்யப்பட்டது.
டெர்மினல் கட்டிடத்தின் உள்ளே எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.. மேலும், இதனால் விமான நிலையத்தில் வேறு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை” என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புது ஏர்போர்ட்: அந்தமானுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாவை மேம்படுத்த ரூ.707.73 கோடி மதிப்பீட்டில் விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டது. அந்தமான் தீவுகளைப் போலவே இந்த ஏர்போர்ட் கட்டிடமும் ஷெல் வடிவத்தில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் 40,837 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய முனையக் கட்டிடம், ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டதாகும்..
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள வீர் சாவர்க்கர் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தைப் பிரதமர் மோடி கடந்த ஜூலை 18ஆம் தேதி திறந்து வைத்தார். இதே கூட்டத்தில் தான் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளையும் விமர்சித்துப் பேசினார். எதிர்க்கட்சிகள் தங்கள் நலனிற்காக ஒன்று சேர்ந்துள்ளனர் என்று சாடிய அவர் எதிர்க்கட்சிகள் ஊழலுக்கு முக்கியத்துவம் தருவதாகவும் பாஜக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவதாகவும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.