`குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் ராமகிருஷ்ணன். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தவர். சில படங்களில் நடித்தவர், அதன் பிறகு இயக்குநர் அவதாரம் எடுத்தார். சமீபத்தில் வெளியான `மாமன்னன்’ படத்தில் நடித்திருந்தவர். `லியோ’ படத்தில் `நான் ரெடி தான்!’ பாடலில் விஜய்யுடன் நடித்திருந்தார். அவரது சினிமா பயணம் குறித்த ஒரு நேர்காணல்.
சினிமா ஆர்வம் இல்லாம சென்னைக்கு வந்த நீங்க எந்தப் புள்ளியில இயக்குநரா ஆகணும்ன்னு முடிவு பண்ணீங்க?
நான் கொஞ்சம் சுமாரா பாடுவேன். சரி பாடுறதுக்கு ட்ரை பண்ணுவோமே அப்படின்னு நிறைய இசையமைப்பாளர்களைச் சந்திச்சேன். அவங்க என்ன சொன்னாங்கன்னா, பாடுறதுக்கு மீயூஸிக் தெரிஞ்சிருக்கணும் அதாவது கர்நாடக சங்கீதம் தெரிஞ்சிருக்கணும். சங்கீதம் தெரியாம பாடுறது கஷ்டம்னு சொன்னாங்க. சரி பாடுறவங்க எல்லாத்தையும் கடைசியா யார் முடிவு பண்றதுன்னு பாத்தா அது டைரக்டர்தான். சரி, அப்போ நம்ம ஏன் டைரக்டர் ஆகக்கூடாதுன்னு தோணுச்சு. `Man Proposes, God Disposes’ ன்னு சொல்லுவாங்கல்ல, அப்படித்தான்.

டைரக்டர் ஆகனும்ன்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் சும்மா இல்லாம, அதுக்கு என்ன நமக்கு வேணும் அப்படிங்கிறதுக்கான ஒரு தேடுதல் இருந்தது. ராமச்சந்திரா ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ்ல நான் `கேன்டீன் பாய்’ வேலை பார்த்தேன். அங்க பயங்கர ஜாலியா இருந்துச்சு. அப்போ காலேஜ்ல வேலை பார்க்கிறவரங்க ரெண்டு பேர் வந்து, ‘என்னடா வாழ்க்கைய இப்படியே ஓட்டிருவிங்களா’ அப்படின்னாங்க. அங்க தான் நமக்கு ஸ்பார்க் ஆகுது. ஐய்யோ! என்னடா இது? லைஃப் இப்படியே போயிருமா? எவ்வளவு நாளைக்கு இது இருக்கும்? சரி அதுக்கப்புறமா தான் நமக்குள்ள என்ன இருக்கு?

சுமாரா பாடுவோம்ல சரி வா எதையாவது ஒன்னு செய்வோம்ன்னு போகும்போது அது வேறயா மாறுது. எனக்கு மூணு மணில இருந்து ஆறு மணி வரை ரெஸ்ட் கிடைக்கும். அதுல கிளம்பி ஒவ்வொரு கோடம்பாக்கம் வாசல்கள் எல்லாத்தையும் கதவத்தட்டி வாய்ப்பு கேட்டேன். பின்னாடி, ஹாஸ்பிடல் வரும் போது தான் விஜயகுமார் சாரோட எனக்கு பழக்கமானது. அதுக்கப்புறம் அத தொடர்ந்து எல்லா சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமைலயும் போய் அவர வீட்ல பாப்பேன்.
அவருக்கு, நான் கேன்டீன்ல் வேலை செய்றேன்றது தெரியும். ஆனாலும், என்ன `அவர் பையன்னு!’ சொல்லுவாரு. அதுதான் இப்போவரைக்கும் பயங்கர உயிர்ப்போட இருக்கு. அப்படியே அசிஸ்டன்ட் டைரக்டர்ன்னு வரும் போது நடிகர் தாமு தான் என்னை பாலச்சந்தர் சார்கிட்ட சேத்துவிட்டாரு.
பாலச்சந்தர் சாரிடம் கத்துக்கிட்ட விஷயம் என்ன?
ஒன்னு ரெண்டுன்னுலாம் சொல்ல முடியாது. ரெண்டாவது நம்ம போய் சேர்ந்த புதுசுல எல்லாமே பிரம்மிப்பாதான் இருந்துச்சு. தாமு அண்ணாட்ட, ‘என்னடா தெரியும் அவனுக்கு?’ ன்னு கேட்டாரு, நான் அவருக்கு பதில் சொன்னேன், ‘கத்துக்க வந்திருக்கேன் சார்’ அப்படினேன். அடுத்த வார்த்தை அவரு, “விட்டுட்டுப் போடா அவன” ன்னு சொன்னாரு. நான் அசிஸ்டன்ட் டைரக்டரா சேந்துட்டேன். கூப்பிட்டு வைச்சு எனக்கு பல விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பார்.

நீங்க லியோ படத்தில் நடித்திருப்பதாகச் செய்திகள் வருகிறதே?
அப்படியா, அதை சம்பந்தப்பட்ட படக்குழு தான் சொல்லணும். ஆனா, அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சிருந்தா ரொம்ப சந்தோஷமாத் தான் நான் பாப்பேன்.
– தி.பெருஞ்சித்திரன்
ராமகிருஷ்ணனின் வீடியோ பேட்டியைக் காண க்ளிக் செய்யவும்