அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் ‘கடந்த 2012 – 2013 காலக்கட்டத்தில் முறையாக வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்யாமல், நோட்டீஸ் அனுப்பியப் பின் மிகத்தாமதமாக 2016-ல்தான் வரி செலுத்தினார்’ எனக் குற்றஞ்சாட்டி, அவருக்கெதிராக வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வருமானவரித் துறை வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, கதிர் ஆனந்த் தரப்பில், 2017-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் இந்த மாதம் 11-ம் தேதி தள்ளுபடி செய்தது.

‘வழக்கை விசாரித்துவரும் வேலூர் நீதிமன்றம்தான், இந்த வழக்கில் முடிவெடுக்க முடியும்’ எனவும் உயர் நீதிமன்றம் தெளிவுப்படுத்தியிருந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணையை விரைவாக முடிக்க, குற்றஞ்சாட்டப்பட்ட கதிர் ஆனந்தை நேரில் ஆஜராகுமாறு, வேலூர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்தது.
அவர் ஆஜராகாமலேயே இருந்ததால், ‘ஜாமீன் பெறக்கூடிய வாரன்ட்’ பிறப்பித்து, உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, ஜூலை 27-ம் தேதியான இன்றைய தினம், எம்.பி கதிர் ஆனந்த் வேலூர் நீதிமன்றத்தில் (ஜே.எம்-1) நேரில் ஆஜரானதால், அவர் மீதான வாரன்ட்டும் ரத்தானது. இதையடுத்து, வேறொரு நாளுக்கு வழக்கு விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கில், கதிர் ஆனந்துக்கு எதிரான வாதத்தை தகுந்த ஆதாரங்களுடன் முன்வைத்து, தீவிரம் காட்டுகிறது வருமானவரித் துறை. கதிர் ஆனந்த் தரப்பிலும், ‘தாமதமாக வரி செலுத்தினால், அபராதம் விதிக்கலாமே தவிர, வழக்குத் தொடர முடியாது. அதேசமயம், வருமானவரித் துறையும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, வழக்குப்பதிவு செய்திருக்கிறது’ என்ற வாதத்தை முன்வைத்திருக்கிறார்கள். விசாரணையும் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்ற தகவல்களும் வெளியாகியிருக்கின்றன. எம்.பி கதிர் ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜரானதால், தகவலறிந்த தி.மு.க-வினரும் அங்குக் கூடினர். இதனால், நீதிமன்ற வளாகமே பரபரப்பாகக் காணப்பட்டது.