சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்தியன் 2 படத்தில் பெண் வேடத்தில் கமல் நடித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்தியன் படத்தில் பெண்களின் உடைகளை அணிந்து கொண்டு சந்துரு கமல் ஃபேஷன் ஷோ நடத்தும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
இந்நிலையில், இந்தியன் 2 படத்திலும் அப்படியொரு மேஜிக்கை கமல் நடத்தி உள்ளார் என சினிமா வட்டாரமே ஆச்சர்யத்தில் வாய் பிளந்து நிற்கிறது.
அவ்வை சண்முகியை மறக்க முடியுமா?: இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெமினி கணேசன், நாகேஷ், மீனா, நாசர், டெல்லி கணேஷ், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி திரைப்படத்தை இப்போது பார்த்தாலும் கமல் எனும் மகா நடிகனை பாராட்டாமல் யாருமே இருக்க மாட்டார்கள்.
பெண் வேடத்தில் அந்த அளவுக்கு கச்சிதமாக நடித்து கலக்கி இருப்பார் கமல்ஹாசன். ஏகப்பட்ட நடிகர்கள் பெண் வேடமிட்டு நடித்தாலும், அவ்வை சண்முகிக்கு இணையாக வராது என பல பிரபலங்களே தெரிவித்துள்ளனர்.

தசாவதாரம் படத்திலும்: அவ்வை சண்முகியை தொடர்ந்து தசாவதாரம் படத்தில் பாட்டி வேடத்தில் நடிகர் கமல்ஹாசன் ரொம்பவே சிரமப்பட்டு ப்ராஸ்தெடிக் மேக்கப்பை போட்டுக் கொண்டு நடித்திருப்பார்.
தனியாக க்ரீன்மேட் ரூமில் அந்த பாட்டி கேரக்டர் ஷூட்டிங் எடுக்கப்பட்டு அதை அப்படியே மற்றவர்கள் இருக்கும் வெளி இடத்தில் இருப்பது போன்று எடிட்டிங்கில் மேட்ச் செய்து சொதப்பாமல் சிஜி காட்சிகளை எப்படி எடுக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்திருப்பார்.

இந்தியன் 2விலும் பெண் வேடம்: இந்நிலையில், இந்தியன் 2 படத்திலும் நடிகர் கமல்ஹாசன் பெண் வேடத்தில் நடித்துள்ளதாக ஒரு தகவல் கசிந்து திரையுலகையே இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இத்தனை வருடங்கள் கடந்தும் எப்படி இப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து கமல் நடிக்கிறார் என்றும் இந்தியன் 2 படத்தில் பெண் வேடம் எதற்கு, எங்கே செட்டாகும் என்றும் ஏகப்பட்ட விவாதங்களும் கிளம்பி உள்ளன. சிவாஜி, எந்திரன், 2.0 படங்களில் சூப்பர்ஸ்டாரையே ஷங்கர் படாத பாடு படுத்திய நிலையில், கமல்ஹாசன் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் கிடைத்துள்ள நிலையில், சும்மாவா விடுவார்.