
அடுத்தடுத்து வெளியாகும் அண்ணன் தம்பியின் போலீஸ் படங்கள்
மலையாள திரை உலகில் கடந்த 40 வருடங்களாக குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் நடிகர் சீனிவாசன். இவருக்கு கதாசிரியர், இயக்குனர் என இன்னும் சில முகங்களும் உண்டு. இவரது மகன்களான வினீத் சீனிவாசன் மற்றும் தயன் சீனிவாசன் இருவருமே இயக்குனர்களாகவும், நடிகர்களாகவும் வெற்றிகரமாக இரட்டைக்குதிரை சவாரி செய்து வருகின்றனர். வினீத் சீனிவாசனை தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த அளவிற்கு அவரது தம்பி தயன் சீனிவாசனை அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதேசமயம் நயன்தாரா, நிவின்பாலி நடித்த லவ் ஆக்சன் டிராமா படத்தை இயக்கியது இவர்தான்.
இந்த நிலையில் மலையாளத்தில் ஜெயிலர் என்கிற பெயரில் உருவாகியுள்ள படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் தயன் சீனிவாசன். ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படமும் இதே பெயரில் வெளியாக இருப்பதால் இந்த படத்தின் டைட்டில் குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படமும் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி தான் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கைதிகளை திருத்தி நல்வழிப்படுத்தும் ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தயன் சீனிவாசன்.
அதேபோல இவரது அண்ணன் வினித் சீனிவாசன் நடித்துள்ள குறுக்கன் என்கிற திரைப்படம் தற்போது ரிலீசாகி உள்ளது. இந்த படத்தில் வினீத் சீனிவாசன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்கள் இருவருமே முதன்முறையாக போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளார்கள் என்பதுடன் இந்த படங்கள் இரண்டு வார இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாவதும் ஆச்சரியமான ஒன்று.