அகமதாபாத்: மோடியின் பாஜக அரசை வீழ்த்த “இந்தியா” கூட்டணி பலத்த வியூகம் வகுத்து வருகிறது. எனினும் பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் பாஜகவே அனைத்து தொகுதிகளையும் மீண்டும் கைப்பற்றும் என்று இந்தியா டிவி- சி.என்.எக்ஸ் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பர்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் கூட இல்லாத நிலையில், தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரதமர் மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒரணியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ” இந்தியா ” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பாஜகவை வீழ்த்தும் ஒரே நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து நாடு முழுவதும் போட்டியிட திட்டமிட்டுள்ளது. மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்து வரும் பாஜகவும் “இந்தியா” கூட்டணி கடும் சவாலாக இருக்கும் எனத் தெரிகிறது. அதேவேளையில், பிரதமர் மோடிக்கு குஜராத் மீண்டும் கை கொடுக்கும் என்றே கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
அதாவது குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 26 லோக் சபா தொகுதிகளிலும் பாஜகவே வெல்லும் என்றும் இந்தியா டிவி- சி.என்.எக்ஸ் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. குஜராத்தில் ஏற்கனவே இரண்டு முறையும் பாஜகவே அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் 61 சதவீத வாக்குகளை பெற்று பாஜகவே மொத்தமாக அள்ளும் என்று கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.
தற்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட தேறாது என்றே கருத்துக்கணிப்பு கூறுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 26 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்றும் ஆம் ஆத்மி கட்சி 8 சதவீத வாக்குகளையே பெறும் என்றும் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதேபோல், நாட்டில் இன்றைய சூழலில் தேர்தல் நடந்தாலும் பாஜகவே மீண்டும் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. தற்போது வரை 265 தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 144 இடங்களில் பாஜக வெற்றி பெறும் எனவும் India TV-CNX கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது