சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கிய அம்மாவை நினைத்து தர்ஷன் பாடிய பாடல் பலரின் மனதை கலங்கடித்தது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3-ல் போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் தர்ஷன்.
இவர் இன்ட்ரோடக்ஷன் ரவுண்டில் ராம் படத்தில் வரும், ஆராரி ராரோ தாயே நீ கண் உறங்கு பாடலை பாடி அனைவரின் மனதையும் கொள்ளை அடித்தார்.
கண்கலங்கிய தர்ஷன்: இவர் பாடி முடித்ததும் தன்னுடைய அம்மா விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுயநினைவு இன்றி கோமா நிலையில் இருப்பதாக கூறி கண்கலங்கினார். அப்போது அர்ச்சனா இந்த செட்டில் இருக்கும் எல்லா பெண்களும் உன்னுடைய அம்மா தான் என சொல்ல சரிகமப மேடையே கண்கலங்கி உணர்ச்சி வசப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் தர்ஷன் ஷாம்லாவுடன் இணைந்து சீனியர் ஜூனியர் ரவுண்டில் மலரே மௌனமா என்ற பாடலை பாடி கோல்டன் பெர்ஃபார்மன்ஸ் வாங்கினார்.

சிக்கன் பிரியாணி: அதனைத் தொடர்ந்து ஷாம்லா தர்ஷனுக்கு சிக்கன் பிரியாணி என்றால் ரொம்ப பிடிக்கும் என்பதை அவருடைய அப்பாவிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். அவனுக்காக சிக்கன் பிரியாணி சமைத்து கொண்டு வந்து இருக்கிறேன். தர்ஷனை பார்க்கும் போதெல்லாம் மகனை பார்ப்பது போல ஓர் உணர்வு ஏற்படுவதாகவும், இதனால், அவனுக்கு என்னுடைய கையால் சிக்கன் பிரியாணி சமைத்துக் கொண்டு வந்திருக்கிறேன் என சொல்லி அதை தர்ஷனுக்கு ஊட்டி விட்டு அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

ரசிகர்கள் பிரார்த்தனை: ஷாம்லாவின் இந்த செயலால் நடுவர்கள் உட்பட அனைவரும் நெகிழ்ச்சியடைந்து தர்ஷனின் அம்மா கூடிய விரைவில் பூரண குணமடைந்து அவனுடன் சேர்ந்து சரிகமப மேடையில் நிற்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.