கிருஷ்ணகிரியில் சக்தி வாய்ந்த வெடி மருந்து வெடித்ததா? – முழுமையான விசாரணை நடத்திட கே.பி.முனுசாமி வேண்டுகோள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்த பட்டாசு வெடி விபத்தில், குவாரிகளுக்கு பயன்படுத்த கூடிய சக்தி வாய்ந்த வெடி மருந்து வெடித்ததால் நடத்திருக்கலாம் என்பதால், அரசு முழுமையான விசாரணை நடத்திட வேண்டும் என அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை பட்டாசு கிடங்கில் கடந்த 29-ம் தேதி நடந்த வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் வெடி விபத்து நடந்த நிகழ்விடத்தில் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பார்வையிட்டார். அப்போது வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், சேதமடைந்த கட்டிடங்கள், வீடுகளை பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே.பி.முனுசாமி கூறியதாவது: “கிருஷ்ணகிரி நகரில் யாரும் எதிர்பார்க்காத ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். இதே போல விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன். இது போன்ற எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறும் போது அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இது எதிர்பாராமல் நடந்த விபத்தா அல்லது திட்டமிட்டு நடந்த சதியால் ஏற்பட்ட விபத்தா என அரசு தெளிவாக விளக்க வேண்டும்.

ஏன் என்றால் இங்கு வந்து ஆய்வு செய்த தமிழக அமைச்சர் சக்கரபாணி சிலிண்டர் வெடித்தால் விபத்து என கூறி இருக்கிறார். இதற்கு மறுப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர், சிலிண்டர் வெடிக்கவில்லை என கூறியிருக்கிறார். மேலும், குவாரிகளுக்கு பயன்படுத்த கூடிய சக்தி வாய்ந்த வெடி மருந்து வெடித்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம். 100 முதல் 150 அடி தூரம் வரையில் மனித உடல்கள், கால்கள், கைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. எனவே இது தொடர்பாக அரசு முழுமையாக விசரணை நடத்திட வேண்டும்.

விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்கி உள்ளார்கள். சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்த அரசு ரூ.10 லட்சம் வழங்கினார்கள். இதே போல், தமிழக முதல்வரே அவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று பார்த்தார். ஆனால், இதுவோ விபத்து. இளம் வயதினர் பலரும் விபத்தில் இறந்துள்ளனர். பலர் பெற்றோரை இழந்துள்ளனர். எனவே இதில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். முதல்வர் இங்கு வந்திருக்க வேண்டும். சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து நடைபெறவில்லை என்று இந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள்.எனவே அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.

மாநில காவல் துறையின் நடவடிக்கையில் நம்பிக்கையில் இல்லாத போதுதான் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது. எனவே இந்த விபத்து எதனால் நடந்தது என முழுமையாக விசாரிக்க வேண்டும். இதற்காக மத்திய மாநில அரசுகளை சாராத சுயாட்சி அமைப்புகளான சிபிஐ., தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரணை வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின் போது, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.