கேரள மாநிலம் கொல்லம் குளத்துப்புழா பகுதியில் வாடகைக்கு வசித்து வருபவர் விஷ்ணு(31). விஷ்ணுவுக்கு கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் 15 சிறுமி ஒருவரிடம் அறிமுகம் ஆகி நட்பாக பழகினார். இருவரும் தங்கள் போட்டோக்களை மாறி மாறி பகிர்ந்துகொண்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் செங்கன்னூரைச் சேர்ந்த ஸ்வீட்டி (20) என்பவரை விஷ்ணு காதலித்து திருமணம் செய்தார். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். ஆனாலும், விஷ்ணு சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கத்தை தொடர்ந்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தனது வீட்டுக்கு வரவழைத்து சிறார் வதை செய்துள்ளார் விஷ்ணு.

அந்த சமயத்தில் விஷ்ணுவின் மனைவி ஸ்வீட்டி அதனை ரகசியமாக செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளார். விஷ்ணுவின் செயலுக்கு அவரது மனைவி ஸ்வீட்டியும் உடந்தையாக இருந்துள்ளார். பின்னர், விஷ்ணுவும், ஸ்வீட்டியும் சேர்ந்து இன்ஸ்டாகிராம் மூலம் சிறார்வதை வீடியோ மற்றும் போட்டோக்களை விற்பனை செய்துள்ளனர். ஒரு போட்டோ 500 ரூபாய்-க்கும், வீடியோ 1,500 ரூபாய்க்கும் விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. வீடியோ-க்களை விற்பனை செய்வதற்காக தனியாக ஒரு போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி உள்ளனர்.
தனது வீடியோவை விஷ்ணு விற்பனை செய்வதை அறிந்த சிறுமி தனது ஆண் நண்பர் ஒருவரிடம் இதுபற்றி கூறி உள்ளார். அந்த நண்பர் சிறுமியின் ஆசிரியருக்கு தகவல் சொல்லியுள்ளார். சிறுமியின் ஆசிரியர் சைல்ட் லைனுக்கு புகார் அளித்துள்ளார். சைல்ட் லைன் மூலம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தி விஷ்ணு, அவரது மனைவி ஸ்வீட்டி ஆகியோர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

ஸ்வீட்டி டியூசன் நடத்துவதாக கூறி சிறுமியை வீட்டுக்கு வரவழைத்துள்ளார் விஷ்ணு. அதன் பின்னர் சிறுமியை சிறார்வதை செய்துள்ளார். `முதலில் தான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஆனால், விஷ்ணுவுடன் சேர்ந்து வாழ்வதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டதால் வேறு வழியில்லாமல் அவருக்கு உதவியதாகவும்’ ஸ்வீட்டி வாக்குமூலத்தில் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சிறுமியின் சாதி சான்றிதழை கிராம நிர்வாக அதிகாரி போலீஸில் ஒப்படைத்ததை தொடர்ந்து விஷ்ணு, ஸ்வீட்டி தம்பதி மீது எஸ்.சி, எஸ்.டி ஆக்ட் படியும் வழக்கு பதிவும் செயப்பட்டுள்ளது. மேலும், சிறுமியின் புகைப்படங்கள் மற்று வீடியோக்களை விலைக்கு வாங்கியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதற்காக சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.