'திருப்பதி' ரீல் பார்த்திருக்கீங்களா ?

தமிழ் சினிமா கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாறிவிட்டது. அதற்கு முன்பு திரைப்படங்களை 'பிலிம்' மூலம்தான் படமாக்கினார்கள். படப்பிடிப்பில் கேமரா மூலம் ஒளிப்பதிவு செய்யப்பட்ட பிலிமை லேப்பில் கொண்டு வந்து பிராசசிங் செய்த பின்தான் காட்சிகள் எப்படி பதிவாகியுள்ளது என்பது தெரியும். படத்தொகுப்பு வேலைகளைச் செய்த பின், இசைக் கோர்ப்பு, இதர ஒலி வேலைகளைச் செய்து அவற்றை சவுண்ட் நெகட்டிவ் ஆக தனியாக உருவாக்குவார்கள். முதலில் பிராசசிங் செய்த பிக்சர் நெகட்டிவ்வைத் தனியாகவும், சவுண்ட் நெகட்டிவ்வை தனியாகவும் உருவாக்கி, அதன் பிறகு அவை இரண்டையும் ஒன்றாக்கி பாசிட்டிவ் பிரிண்ட் ஆக மாற்றி அதைப் பிரதி எடுத்து தியேட்டர்களுக்கு அனுப்புவார்கள். அவை புரொஜக்டரில் பொருத்தினால் நமக்குத் திரையில் சினிமா கிடைக்கும். அப்படிப்பட்ட நீண்ட வேலைகள் தற்போதைய டிஜிட்டல் சினிமாவில் இல்லை.

கேமரா மூலம் நேரடியாக ஹார்ட் டிஸ்க்கில் பதிவு செய்தால் அதை அப்படியே கம்ப்யூட்டரில் பொருத்தி ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சியைப் பார்க்கலாம். சினிமா என்றாலே பிலிம் தான் என்பது கடந்த பத்து வருடங்களில் இப்படி மாறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இப்போதெல்லாம் பிலிம் வடிவில் உள்ள பல திரைப்படங்களை டிஜிட்டலுக்கு மாற்றிவிட்டார்கள். அதனால் நெகட்டிவ்களையும், பிலிம்களையும் சேகரித்து வைப்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. ஆனால், பாரம்பரிய படத் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனம் உள்ளிட்ட சிலர் அவர்களது படங்களை பிலிமிலும் சேகரித்து வைத்துள்ளார்கள்.

அப்படி ஏவிஎம் நிறுவனம் தயாரித்த அஜித், சதா நடித்து வெளிவந்த 'திருப்பதி' படத்தின் பிலிம் ரீலை அந்நிறுவனத்தின் வாரிசான அருணா குகன் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அப்போதெல்லாம் படத்தின் நீளத்திற்கு ஏற்ப ஒவ்வொரு தியேட்டருக்கும் இது போன்று ரீல்கள் அனுப்பப்படும். பெரிய படமாக இருந்தால் 500 பிரிண்ட் எல்லாம் போடுவார்கள். இத்தலைமுறை சினிமா ரசிகர்கள் இது போன்ற பிரிண்ட்டுகளை இனி மியுசியத்தில் மட்டுமே பார்க்க முடியும்.
https://twitter.com/arunaguhan_/status/1686604272769900544

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.