ரஜினிகாந்த் நடித்து நெல்சன் இயக்கிய `ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், அதன் ஷோகேஸ் (டிரெய்லர்) தற்போது வெளியாகி இருக்கிறது.
ரசிகர்களை ஏமாற்றாத அளவில் இருக்கும் ஷோகேஸில் தனித்துவமாகத் தெரிகிறார், வில்லன் கேரக்டரில் நடித்திருக்கும் விநாயகன். மலையாள நடிகரான விநாயகன், தமிழில் ‘திமிரு’, ‘காளை’, ‘மரியான்’ என ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.
இரண்டு நிமிட ஷோகேஸில் ஒரு சில இடங்களில் வந்தே கவனிக்க வைத்திருக்கும் விநாயகன், நிச்சயமாகப் படத்திலும் மிரட்டியிருப்பார். இதைத்தான் இசை வெளியீட்டு விழாவிலும் ரஜினி சொல்லியிருந்தார்.

விநாயகனின் நடிப்பைப் பற்றிச் சொன்ன ரஜினிகாந்த், அதற்கு முன்பாக இந்தக் கதாபாத்திரத்திற்கு வேறு ஒரு நடிகரிடம் கேட்கப்பட்டதாகச் சொன்னார். அந்த நடிகர் வேறு யாருமில்லை; ‘தளபதி’ படத்தில் ரஜினியின் நண்பராக நடித்த மம்மூட்டிதான்.
ரஜினி அவரின் பெயரைச் சொல்லாமல் இந்த விஷயத்தை மேடையில் சொல்லும் போது, கீழே அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த நெல்சனைத் திரையில் காட்டினார்கள்.

அப்போது நெல்சனுக்கு அருகில் அமர்ந்திருந்தவர், ‘யார் அந்த நடிகர்’ என்று கேட்டபோது, ‘மம்மூட்டி’ என்று சொல்லுவார். ‘தளபதி’ படத்தில் நண்பர்களாக நடித்தவர்களை எப்படிச் சண்டை போட வைப்பது என்றுதான், அவரிடம் கேட்டுவிட்டு பின்னர் வேண்டாம் என்கிற முடிவையும் எடுத்திருக்கிறார்கள்.
இதே `ஜெயிலர்’ படத்தில் மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ் குமார் என அனைத்து திரைத்துறைகளையும் சேர்ந்த நடிகர்கள் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.