சிறுவர்கள் 2 மணி நேரம் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தலாம்: சீனாவில் புதிய கட்டுப்பாடு

பெய்ஜிங்: சீனாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஸ்மார்ட்போனில் இணையம் பயன்படுத்தும் நேரத்தை நிர்ணயித்து சீன அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

சீனாவின் சைபர்ஸ்பேஸ் அமைச்சகம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலான இணைய சேவைகளை பெற முடியாது. மேலும், 16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே இணையத்தை பயன்படுத்த முடியும். 8 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் மட்டுமே இணையம் பயன்படுத்த வேண்டும். 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் மட்டுமே இணையம் பயன்படுத்த அனுமதி.

இதில் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் மனநலத்துக்கு உகந்தவையாக கருதப்படும் செயலிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அவை எந்தெந்த செயலி என்ற பட்டியலை சீன சைபர்ஸ்பேஸ் அமைச்சகம் வெளியிடவில்லை. இளம் தலைமுறையினர் இணையத்துக்கு அடிமையாவதிலிருந்து காக்க இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு முதலே குழந்தைகளுக்கான ஆன்லைன் கட்டுப்பாடுகளை சீனா கடுமையாக்கி வருகிறது. மேலும், இந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு இளம் தலைமுறையினர் இணையத்துக்கு அடிமையாவது குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய நேரக் கட்டுப்பாடுகள் எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்த விவரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.