மெக்சிகோவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பஸ் மீது ரெயில் மோதலில் 7 பேர் பலி

தொழிற்சாலை பணியாளர்கள்

வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் குவெரேடாரோ மாகாணத்தில் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் அங்குள்ள தொழிற்சாலை பணியாளர்கள் பலர் வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எல் மார்க்ஸ்வெஸ் நகரில் உள்ள ரெயில் தண்டவாளம் அருகே பஸ் சென்றது. அதேசமயம் அந்த தண்டவாளத்திலும் ரெயில் வந்து கொண்டிருந்தது.

பஸ் தூக்கி வீசப்பட்டது

ஆனால் தண்டவாளம் அருகே சிக்னல், கேட் எதுவும் இல்லாததால் அந்த ரெயில் வந்தது பஸ் டிரைவருக்கு தெரியவில்லை. எனவே தண்டவாளத்தை கடக்க முயன்ற பஸ் மீது அந்த ரெயில் வேகமாக மோதியது. இதில் அந்த பஸ் சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு தரதரவென இழுத்து செல்லப்பட்டது. இதனால் பஸ்சில் இருந்து பயணிகள் தூக்கி வீசப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த கோர விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 17 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பை மேம்படுத்த வலியுறுத்தல்

இதற்கிடையே இந்த பஸ் மீது ரெயில் மோதி இழுத்து செல்லும் வீடியோ அங்குள்ள சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மெக்சிகோவில் உள்ள 7 ஆயிரம் ரெயில் பாதைகளில் சுமார் 1,500 மட்டுமே சிக்னல்களை கொண்டுள்ளன. இதனால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே ரெயில்வே கிராசிங்குகளில் பாதுகாப்பு நிலைமையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அரசாங்கத்திடம் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.