`அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்குப் புனித நீர் அனுப்புகிற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கும்பகோணம் காங்கிரஸ் கட்சி மேயருக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமை அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியினர் நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரவணன் இருந்துவருகிறார். கடந்த வாரம் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் பணிக்காக, கும்பகோணம் மகாமகம் குளத்திலிருந்து புனித நீர் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மேயர் சரவணன், புனித நீர் அடங்கிய குடத்தைத் தூக்கிக்கொண்டு இந்து அமைப்பினருடன் பேரணியாகச் சென்றார்.
அவருடைய இந்தச் செயல், காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில் தற்போது கும்பகோணம் நகரம் முழுவதும் `மாநகர காங்கிரஸ்’ எனக் குறிப்பிட்டு, நான்கு பேரின் பெயர்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. அதில், `காங்கிரஸ் தலைமையே நடவடிக்கை எடு!’ எனத் தலைப்பிட்டு, `எம்மதமும் சம்மதம் என்கிற காங்கிரஸ் கட்சிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில், ஆர்.எஸ்.எஸ் கும்பலுடன் சேர்ந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு தீர்த்த குடம் சுமந்த விசுவாசமற்ற குடந்தை மேயர்மீது நடவடிக்கை எடு’ என ஒட்டப்பட்ட போஸ்டர் கும்பகோணம் பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியினரிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், “பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராகச் செயல்பட்டுவருகின்றனர். காங்கிரஸ் கட்சியை ஒடுக்கப்பார்க்கும் அவர்களது எண்ணம் ஒருபோதும் பலிக்காது என, நடைப்பயணம் உள்ளிட்ட கடுமையான எதிர்ப்பு முன்னெடுப்புகளை எடுத்துவருகிறார் ராகுல். `எம்மதமும் சம்மதம்’ என்பதே காங்கிரஸ் கட்சியின் குறிக்கோள்.
மேலும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் வளர்ச்சியைத் தடுத்து, காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் செயல்பட்டுவருகின்றனர். தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலினும் இதைச் செய்துவருகிறார். இந்த நிலையில் தி.மு.க கூட்டணியிலிருக்கும் காங்கிரஸ் கட்சி மேயர் சரவணன், இந்து அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியான அயோத்திக்குப் புனித நீர் அனுப்பும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்.
அத்துடன் புனித நீர் அடங்கிய குடத்துடன் பேரணியிலும் கலந்துகொண்டிருக்கிறார். அவரின் செயல் காங்கிரஸ் கட்சிக்கு விரோதமானது. இதன் மூலம் கூட்டணியிலிருக்கும் தி.மு.க-வுக்கும் துரோகம் செய்திருக்கிறார். எனவே, தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்கிற வகையில் கட்சியினர் போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர்” என்றனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவர் லோகநாதனிடம் பேசினோம். “சமூக வலைதளத்தில் போட்டோ வந்ததைப் பார்த்து மேயரிடம் கேட்டேன். ஆய்வுக்குச் சென்றபோது தற்செயலாக அதில் கலந்துகொண்டதாகக் கூறினார். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் இதை நடத்தவில்லை, பொதுவான நிகழ்ச்சியாகவே நடந்திருக்கிறது. கோயில், சர்ச், பள்ளிவாசல் எனப் பொதுவாக நடைபெறும் எத்தனையோ நிகழ்ச்சிகளில் நானும் கலந்துகொண்டிருக்கிறேன். கோயிலுக்காக, கடவுளுக்காக நடைபெற்ற நிகழ்ச்சில் மேயர் கலந்துகொண்டிருக்கிறார்” என்றார்.

மாநகராட்சி மேயர் சரவணனன்
இது குறித்து மேயர் சரவணனிடம் பேசினோம். “போஸ்டரில் குறிப்பிட்டிருந்த நான்கு பேரிடம் கேட்டதற்கு, `நாங்கள் ஒட்டவில்லை’ என்கின்றனர். என் வளர்ச்சியைப் பிடிக்காமல் காழ்ப்புணர்ச்சியில் யாரோ சிலர் இதைச் செய்திருக்கின்றனர். இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்திருக்கிறேன்” என்றார்.